உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துவேலாயுதசுவாமி பிரம்மோத்சவ விழாவில் பாரிவேட்டை!

முத்துவேலாயுதசுவாமி பிரம்மோத்சவ விழாவில் பாரிவேட்டை!

கும்பகோணம்: கும்பகோணம் அருகே தாண்டவந்தோட்டம் முத்துவேலாயுதசுவாமி பிரம்மோத்சவ விழாவை முன்னிட்டு நேற்று மாலை பாரிவேட்டை எனும் பெரிய திருவிழா நடந்தது. சரித்திர சிறப்பு பெற்ற தாண்டவந்தோட்டம் ஊரின் நடுவில் முத்துவேலாயுதசுவாமி, அய்யனார் ஆகிய தெய்வங்கள் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இத்தலமான அய்யப்பன்கோவிலில் மூலஸ்தானத்தில் வேலாயுதசுவாமி (சுப்ரமணியசுவாமியாக) வீற்றிருக்கிறார். இந்தியாவிலேயே அய்யனார்கோவிலில் மூலஸ்தானத்தில் சுப்ரமணியசுவாமியாக வேலாயுதசுவாமி எழுந்தருளியிருப்பது இந்த ஊரில்தான். சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் பிரம்மோத்சவ விழா கடந்த ஏப்ரல் 24ம்தேதியன்று தொடங்கியது. நாளை (4ம்தேதி) வரை இவ்விழா நடக்கிறது. பூச்சொரிதலுடன் தொடங்கிய இவ்விழாவை தொடர்ந்து காப்பு கட்டி சுவாமி வீதியுலா நடந்தது. அதையடுத்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய திருவிழாவான பாரி வேட்டை எனும் பெரிய திருவிழா நேற்று (மே 2ம்தேதி) மாலை கோவிலிலிருந்து அய்யனார், வேலாயுதசுவாமி, வள்ளி தெய்வயானை சமேதராக சுப்ரமணியசுவாமியும் பாரிவேட்டைக்கு புறப்பட்டனர். இந்த பாரிவேட்டையை முன்னிட்டு சிவப்பு குதிரையில் அய்யனார் முன்னே செல்ல, வெள்ளைக்குதிரையில் வேலாயுதசுவாமியும், அதைத் தொடர்ந்து வள்ளி தெய்வயானை சமேதராக சுப்ரமணியசுவாமியும் கோவிலிலிருந்து புறப்பட்டு தாண்டவந்தோட்டம் தெருவிற்கு எழுந்தருளினர். அங்கு பக்தர்கள் படையலிட்டு அய்யனாரே, வேலாயுதா, சுப்ரமணியா என்ற கோஷங்கள் ஒலிக்க பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. தொடர்ந்து வயலில் இறங்கி அந்த ஊர் எல்லை வரை ஓடி அக்கரையில் உள்ள பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து புறப்பட்ட இடத்திற்கு வந்தடைந்தது. பின்னர் முன்னோட்டம், பின்னோட்டம் நடந்தது. இந்த பாரிவேட்டையை காண்பதற்காக திரளான பக்தர்கள் பல ஊர்களில் இருந்து இக்கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை தாண்டவந்தோட்டம் கிராம சமுதாய நல சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !