மகான்களின் சிந்தனைகளும், போதனைகளும் நம்மை எப்போதும் வழிநடத்த வேண்டும்!
கோவை: கோவை நன்னெறிக் கழகம் சார்பில் விவேகானந்தர் 150 வது நூற்றாண்டு விழா நடந்தது. நன்னெறிக் கழக செயலாளர் கந்தசாமி வரவேற்றார். துணைத் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவிஞர் மகேஸ்வரிசற்குரு "வெண்மதி விவேகானந்தர் என்ற தலைப்பில் பேசுகையில், ""இந்தியாவின் மிகச் சிறந்த ஆன்மீக ஜோதியாக விளங்கியவர் விவேகானந்தர். ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் எத்தனையோ சீடர்கள் இருந்தனர். அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத குருவின் ஆசியும், அனுக்கிரகமும் விவேகானந்தருக்கு கிடைத்தது. ஆரம்ப காலத்தில் ஆன்மீகத்தின் மீது விவேகானந்தருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. தொடர்ந்து தனது குருவிடம் எதிர்மறையான கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். பரமஹம்சர் அமைதியாக விளக்கம் அளித்தார். அவருக்கு குருவின் "ஸ்பரிச தீட்சை கிடைத்தவுடன் கடவுளின் ஞான தரிசனம் கிடைத்தது. அதன் பிறகுதான் ஆன்மீகத்தின் மீது அவருக்கு முழுமையான நம்பிக்கை ஏற்பட்டது. சிகாகோ மாநாட்டில் இந்து மதத்தின் பெருமைகளை விவேகானந்தர் எடுத்து சொன்ன பிறகுதான், அயல் நாட்டவர்களுக்கு நமது வழிபாட்டின் மீது மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டது. வாழும் கடவுளை வழிபடுங்கள் என்பது அவரின் கொள்கை. ஆன்மிகத்தை மனித நேயத்தோடு போதித்தவர் விவேகானந்தர். அவரது வருகையால் இந்து மத வளர்ச்சிக்கும், இந்திய பண்பாட்டுக்கும் மிகப்பெரிய வெளிச்சம் கிடைத்தது. விவேகானந்தர் போன்ற மகான்களின் சிந்தனைகளும், போதனைகளும்தான் எப்போதும் நம்மை வழி நடத்த வேண்டும். அப்போதுதான் நாம் வாழும் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக இருக்கும். இவ்வாறு, மகேஸ்வரிசற்குரு பேசினார். நன்னெறிக் கழக பொருளார் ஜெயசந்திரன், செயலாளர் ஸ்ரீராம், தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.