கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா: மே12ல் துவக்கம்!
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வரும் 12 ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்குகிறது. தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா நடப்பது வழக்கம். இதில், கரூர் மாவட்டம் மட்டுமன்றி, திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் ஆண்டுதோறும் பங்குபெற்று வருகின்றனர்.நடப்பாண்டு வரும் 12ம் தேதி கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதல் விழாவுடன் துவங்குகிறது. தொடர்ந்து 17ம் தேதி பூச்செரிதல், 19ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 27ம் தேதி திருத்தேர் ஊர்வலமும், 28ம் தேதி அக்னி சட்டி, அலகு, காவடி ஊர்வலம் 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும் வெகுசிறப்பாக நடக்க உள்ளது. அன்றிரவு அமராவதி ஆற்றில் நடக்கும் வாண வேடிக்கை திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.தொடர்ந்து வரும் ஜூன் 6ம் தேதி பஞ்சபிரகாரமும், 7ம் தேதி புஷ்ப பல்லக்கு, 8ம் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் 9ம் தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முத்துகருப்பன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.