தென்காசி பேச்சியம்மன் கோயிலில் இன்று கொடை விழா
தென்காசி: தென்காசி ஒப்பணைத் தெரு பேச்சியம்மன் கோயில் கொடை விழா இன்று(7ம் தேதி) நடக்கிறது. தென்காசி ஒப்பணைத் தெரு பேச்சியம்மன் கோயில் கொடை விழா கடந்த ஏப்.30ம் தேதி கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. கொடை விழாவை முன்னிட்டு நேற்று (6ம் தேதி) மாலை தீர்த்தக்குடம், பூந்தட்டு வலம் வருதலும், இரவு ஒப்பணை கற்பக விநாயகருக்கு சிறப்பு முழுக்காப்பு மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதனையடுத்து பேச்சியம்மனுக்கு சிறப்பு குற்றால தீர்த்த அபிஷேகம், புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 12 மணிக்கு குடி அழைப்பு, மாக்காப்பு சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று (7ம் தேதி) காலை பால் குடம் எடுத்தலும், மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனையும், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவமும், 5 மணிக்கு பொங்கலிடுதலும், நள்ளிரவு 2 மணிக்கு கொடை விழாவும் நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு சந்தனக்காப்பு தீபாராதனையும், 4மணிக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. கொடை விழாவின் எட்டாம் நாளான 14ம் தேதி இரவு 9.30 மணிக்கு முழுக்காப்பு தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை தென்காசி ஒப்பணைத் தெரு செங்குந்தர் சமுதாய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.