வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேரோட்டம்!
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா தேரோட்டம் நேற்று நடந்தது. அம்மன் கிழக்கு வீதியில் பவனி வந்து கோயில் முன் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா,மே 7 துவங்கியது. அன்று அதிகாலை அம்மன் திருவாபரண பெட்டி கோயில் வீட்டில் இருந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அன்று அம்மன் அலங்கார சப்பரத்தில் ஊருக்குள் இருந்து கோயிலுக்கு வந்தார். விழா நாட்களில், கவுமாரி அம்மன் முத்துப்பல்லக்கிலும், புஷ்ப பல்லக்கிலும் பவனி வந்து அருள்பாலித்தார்.நேற்று, பிரதான நிகழ்ச்சியாக காலையில் திருத்தேருக்கு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டு, தேரில் அமர்ந்தார். 5 மணிக்கு தேர்தல் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் பழனிசாமி, எஸ்.பி., பிரவீன்குமார் அபிநபு, பேரூராட்சி தலைவர் ரத்தினசபாபதி, கோயில் செயல் அலுவலர் சுரேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, கிழக்கு வீதி வழியாக பவனி வந்தது. கோயில் முன் நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.