திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா: ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!
திருத்தணி: திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. இதில், ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். 17 ஆயிரம் பேர், காப்பு கட்டி தீக்குண்டம் இறங்கினர்.திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்திரை மாதம், தீமிதி திருவிழா நடைபெறும். கடந்த மாதம், 25ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.கோவில் வளாகத்தில் தினமும் பிற்பகல், 2:00 மணியளவில், மகாபாரத சொற்பொழிவு நடந்தது. மாலையில், அம்மன் வீதியுலா நடந்தது. இரவு, 9:00 மணிக்கு கிருஷ்ணன் தூது, குறவஞ்சி, துகிலுரித்தல் உள்ளிட்ட மகாபாரத நிகழ்வுகள், தெருக்கூத்து நாடகமாக நடத்தப்பட்டன. அதிகாலை, 6:00 மணி வரை நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை, திருத்தணி போன்ற நகராட்சி பகுதியை சேர்ந்த மக்களும் கண் விழித்து பார்த்தனர்.இதையடுத்து, நேற்று தீமிதி விழா நடந்தது. காலை, 9:00 மணியளவில், துரியோதனன் படுகளம் எனும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பிரமாண்டமான துரியோதனன் உருவ சிலை செய்யப்பட்டிருந்தது. மகாபாரத, 18ம் போர் நிகழ்வில், துரியோதனன் கொல்லப்பட்ட நிகழ்ச்சி, நிகழ்த்தப்பட்டது.தொடர்ந்து, மாலை, 6:00 மணியளவில், ஆறுமுகசாமி கோவில் வளாகத்தில் இருந்து, பூங்கரகத்துடன் திரவுபதியம்மன் ஊர்வலம் துவங்கியது. இதில், காப்பு கட்டி விரதம் இருந்த, 17 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஊர்வலமாக வந்த பக்தர்கள், 6:15 மணியளவில் கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கினர். பின், அம்மனை வழிபட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். திருவிழாவில், திருத்தணியை சுற்றியுள்ள, 50 கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருத்தணி ஏ.எஸ்.பி., விஜயகுமார் தலைமையிலான, 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.