செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை
சேலம்: சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. தமிழகத்தில், கடந்த ஆண்டு மழை பெய்யாததால், கடுமையான வறட்சி நிலவி வருகிறது. பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பல்வேறு சமூகத்தினர், மழை வேண்டி, வழிப்பாட்டு தலங்களில் கூட்டு பிரார்த்தனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில், கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை, 8.30 மணிக்கு மண்பானை களையத்தில், தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 9 மணிக்கு, மகா மாரியம்பிகா ஹோமம், திரவ்யாஹுதி, மஹா பூர்ணாஹுதி, மகா மாரியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, கூழ்வார்ப்பு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, 6.30 மணிக்கு பன்னிரு திருமுறை மன்றம் சார்பில், மழை வேண்டி கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கோவில் அர்ச்சகர் நாகராஜ், அர்ச்சகர் சிவா ஆகியோர் தலைமையில் நடந்த வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.