துறையூர் பெருமாள் மலை தேர்த்திருவிழா மே 16ல் துவக்கம்
துறையூர்: தென் திருப்பதி துறையூர் பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி திருத்தேர் பெருந்திருவிழா 16ம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 24ம் தேதி காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருச்சி மாவட்டம், "தென் திருப்பதி துறையூர் பெருமாள் மலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி எழுந்தருளியுள்ளார். இம்மலை அடிவாரத்திலுள்ள கிரிவல பாதையில் பவுர்ணமி தோறும் கிரிவலமும், ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்ஸவ திருத்தேர் பெருந்திருவிழா 13ம் நாள் நடக்கும். இந்தாண்டு வரும் 14ம் தேதி திருவிழா நடத்த அதிகார சுவாமி நகர் சோதனையிடும் நிகழ்ச்சியும், 15ம் தேதி வாஸ்து சாந்தி செய்து 16ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மலை மீது கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. மாலை அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா அடிவாரத்தில் கிரிவல பாதையில் நடைபெறும். 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை காலையில் பல்லக்கிலும், மாலையில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ, கருட, யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு அடிவாரத்திலுள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும். மாலையில் இந்திரா விமானத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். வரும் 23ம் தேதி காலை பல்லக்கிலும், மாலை குதிரை வாகன வீதி உலா திருவேடுபரி நடைபெறும். 24ம் தேதி காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பூனாட்சி, அரசு கொறடா மனோகரன், எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராசாத்தி, துறையூர் யூனியன் தலைவர் பொன்காமராஜ், நகராட்சி தலைவர் முரளி, துணை தலைவர் திவ்யா உட்பட துறை அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர். வரும் 25ம் தேதி காலை தீர்த்த வாரியும் மாலை சப்தாவரணம், 26ம் தேதி காலை திருமஞ்சனம், மாலை ஆளும் பல்லாக்குடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவில் பங்கேற்று எம்பெருமானின் அருளுக்கு பாத்திரர்களாகும்படி கோவில் தக்கார் ரத்தினவேல் பாண்டியன், செயல் அலுவலர் சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளனர்.