ரூ.27 லட்சத்தில் முருகர் தேர் புதுப்பிக்கும் பணி துவக்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பழுதடைந்த முருகர் தேர், 27 லட்ச ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி, நேற்று சிறப்பு பூஜையுடன் துவங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவின் போது, விநாயகர், முருகர், சமேத அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் வீதி உலா வருவர். கடந்த ஆண்டு, தீபத் திருவிழாவின் போது, பக்தர்களால் வடம் பிடித்து இழுத்து செல்லப்பட்ட போது, முருகர் தேர் பீடம் முறிந்தது. தேரை புதுப்பிக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முருகர் தேரை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி நேற்று, கோவில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில், வேத மந்திரம் முழங்க சிறப்பு பூஜை நடத்தப்பட்டு துவங்கியது. வரும் கார்த்திகை தீப திருவிழாவிற்குள் பணிகள் முடித்து, வெள்ளோட்டம் நடத்த கோவில் நிர்வாகம் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.