1100 பழமையான கோயிலுக்கு தானம் செய்த மன்னர்கள்!
உசிலம்பட்டி:உசிலம்பட்டி அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்து, பாரம்பரிய நடைபயணக் குழுவினர் எடுத்துக் கூறினர்.உசிலம்பட்டி- மதுரை ரோட்டில், பொட்டல்பட்டி விலக்கில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ளது ஆனையூர். கி.பி. 946ல் சோழன் தலை கொண்ட வீரபாண்டியன், இக்கோயிலின் கருவறை சுவற்றில், தமக்கு ராஜ்ஜியம் தந்தருளிய திருக்குறுமுல்லூர் அக்கினீஸ்வர பரமேஸ்வர சுவாமிக்கு தினசரி பூஜைகள் நடக்க, தானம் செய்தற்கான கல்வெட்டு உள்ளது. மேலும், முதலாம் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் மற்றும் சுந்தர சோழ பாண்டியன், குலசேகர பாண்டியன், நாயக்க மன்னர்கள் என கி.பி. 950 முதல் 14ம் நூற்றாண்டு துவக்க காலம் வரையில், மன்னர்கள் தானம் செய்த குறிப்புகள் கல்வெட்டாக உள்ளது. இக்கோயிலுக்கு, பாரம்பரிய நடைபயணமாக, தானம் அறக்கட்டளை, இந்திய பாரம்பரிய பாதுகாப்பு அமைப்பு ( இன்டாக்) மற்றும் டிராவல் கிளப் குழுவினர்கள் வந்தனர். கட்டக்கருப்பன்பட்டி ஊராட்சித் தலைவர் கார்த்திகைச்சாமி, ஓய்வு பெற்ற வரலாற்று பேராசிரியர் வெங்கட்ராமன், தொல்லியல் நிபுணர் வேதாச்சலம், ஒருங்கிணைப்பாளர் பாரதி பங்கேற்றனர்.