திருவட்டார் ஜடாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா
திருவட்டார்: திருவட்டார் தளியல்தெரு ஜடாதீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று(22ம் தேதி) நடந்தது.மழுவை எறிந்து கேரளத்தை ஸ்தாபித்த பரசுராமர், தென் கேரளத்தில் 10 சிவாலயங்களை பிரதிஷ்டை செய்தார் என்பது ஐதீகம். அதில் ஒன்று தளியல்தெரு ஜடாதீஸ்வரர் கோயில் என்று கூறப்படுகிறது. மேலும், திருவட்டார் ஆதிகேசவ பெருமாளின் பள்ளி வேட்டை ஆண்டிற்கு இருமுறை இக்கோயிலில் நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த இக்கோயில், பக்தர்களின் பெரு முயற்சியால் கடந்த 12 ஆண்டுகளாக நடை திறக்கப்பட்டு, தினசரி இருவேளை பூஜைகள் நடந்து வருகின்றன. மேலும், பிரதோஷ பூஜையானது 21 அபிஷேகம் மற்றும் புஷ்பாபிஷேகத்துடன் நடந்து வருவது தனிச்சிறப்பு. ஆண்டில் ஒரு பிரதோஷம் பக்தர்கள் இணைந்து பொதுபிரதோஷ திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயில் காளை மணியன், வழக்கமான பக்தர்கள் கோயிலுக்கு வரும்போது ஒரு விதத்திலும், நோய் நொடியுடன் வரும் பக்தர்களைப் பார்த்தால் இன்னொரு விதத்திலும், அந்நியர்கள் வரும்போது மற்றொரு விதத்திலும் சப்தம் எழுப்புவது பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் புனரமைக்கப்பட்டு, நேற்று(22ம் தேதி) கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த(20ம் தேதி) விழா துவங்கியது. 5 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை பள்ளி உணர்த்தல், கணபதிஹோமம், கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகள் நடக்கிறது. முதல் நாள் மதியம் சமயவகுப்பு மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், 2ம் நாள் மதியம் சமயவகுப்பு மாணவ, மாணவியருக்கான பண்பாட்டுப்போட்டிகள் நடந்தன. நேற்று(22ம் தேதி) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள், கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு ஆகிய 7 நதிகளின் நீரினால், கணபதிக்கும், ஜடாதீஸ்வரருக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், மாத்தூர்மடம் சுப்பிரமணியரு தலைமையில் நடந்தது. தொடர்ந்து, சனாதனன் தலைமையில் சமயமாநாடு, பரிசு வழங்கல், மதியம் அன்னதானம், மாலை தேவார பஜனை, இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. இன்று(23ம் தேதி) காலை காவடி அபிஷேகம், பன்னீர் நிறைத்தல், காவடி அலங்காரம், வேல் தரித்தல், அலங்கார தீபாராதனை, பவனி வருதல், மதியம் அன்னதானம், மாலை புஷ்ப காவடி மற்றும் அலகு காவடிகளுடன் அலங்கார யானை, சிங்காரிமேளம், விளக்குகெட்டு, அலங்கார வாகனங்கள் அணிவகுக்க குமாரகோவிலுக்கு புறப்படுதல் நடக்கிறது. நாளை(24ம் தேதி) காலை தீபாராதனை, குமாரகோவிலில் இருந்து காவடி அபிஷேகம் முடித்து பக்தர்கள் கோயில் வந்தடைதல், மாலை சிறப்பு அபிஷேகம், அலங்கார தேர்பவனி, இரவு இடும்பன் பூஜை, வாணவேடிக்கை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் கமிட்டி மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.