உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் ஊழியர்களுக்கு பணிக்கொடை!

கோவில் ஊழியர்களுக்கு பணிக்கொடை!

தமிழக கோவில்களில், பணி புரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, பணிக்கொடை வழங்க வேண்டும் என, இந்து சமய அறநிலையத்துறைக்கு, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஓய்வு பெற்ற பணியாளர்களின், 24 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, கோவில்களில், இரவு காவலர், அர்ச்சகர், விளக்கு ஏற்றுபவர், மடப்பள்ளி பரிசாரகர், துப்புரவாளர், அலுவலக உதவியாளர், மேலாளர், கணக்கர், காசாளர் போன்ற பணிகள் புரிந்து, ஓய்வு பெற்றவர்களின் தற்போதைய எண்ணிக்கை, 3,216 ஆகும். இவர்கள், 1989ம் ஆண்டிலிருந்து பணிக்கொடை கேட்டு, போராடி வருகின்றனர். 1989ம் ஆண்டு, திருநெல்வேலி கோர்ட்டில், பணிக்கொடை கேட்டு வழக்கு பதிவு செய்தனர். அதில், தொழிலாளர்களுக்கு ஆதரவாக, தீர்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், இந்து சமய அறநிலையத்துறை, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அங்கும் தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இருப்பினும் அறநிலையத்றை, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பில், "தொழிலாளர் சட்டம் - 1972வின்படி, அறநிலையத் துறை ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், கால் நூற்றாண்டுகளாக நடந்து வந்த தொழிலாளர்களின் போராட்டம், வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் யூனியன் நிர்வாகிகள், கூறுகையில், "கோவில் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க கூடாது என்ற நோக்கத்தில், 24 ஆண்டுகளாக அறநிலையத்துறை செயல்பட்டு வந்தது. இருந்தாலும், எங்களின் சட்டப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !