வத்திராயிருப்பு மாரியம்மன் கோயில் அக்னிச்சட்டி ஊர்வலம்!
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு கீழரதவீதி மாரியம்மன் கோயில் வருடாந்திர பொங்கல் விழாவையொட்டி பக்தர்களின் அக்னிச்சட்டி, பெண்களின் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. காப்புக்கட்டு வைபவத்துடன் திருவிழா துவங்கியது. முதல்நாள் அதிகாலை மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து பூஜைகள் செய்யப்பட்டன. விரதமிருக்கும் பக்தர்கள் கையில் காப்புக்கட்டிக்கொண்டு கோயிலை வலம் வந்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கரகம் எடுத்து வந்தனர். கோயிலில் எழுந்தருளிய அம்மனுக்கு மறுநாள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். முத்தாலம்மன் கோயிலில் இருந்து விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். மாலையில் பக்தர்கள் அக்னிச்சட்டிகளை ஏந்தியபடி ஊர்வலம் சென்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்றனர். ஊர்வலம் முடிந்து மீண்டும் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு சமர்ப்பித்தனர். அக்னிச்சட்டி பக்தர்களுக்கு அபிஷேகம் செய்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் பக்தர்கள் வழிபட்டனர். பக்தசபா தலைவர் சேதுராமன், செயலாளர் முருகேசன், பொருளாளர் கருப்பையா, அன்னதான கமிட்டி தலைவர் பாஸ்கரன் உட்பட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.