நரசிம்ம பெருமாள் கோவிலில் விடையாற்றி உற்சவம்!
சிங்கப்பெருமாள்கோவில்: நரசிம்ம பெருமாள் கோவிலில், விடையாற்றி உற்சவத்துடன், பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் அமைந்துள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.17ம் தேதி, சிறப்பு உற்சவமான, கருட சேவையும், 21ம் தேதி, தேரோட்டமும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நிறைவு விழாவான, நேற்று முன்தினம் இரவு, விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதில், நரசிம்ம பெருமாள் சன்னிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.பின்னர், நரசிம்ம பெருமாள் ஆள்மேல் பல்லக்கில், வீதியுலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.