உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை மலைப்பாதை விபத்துகளை தடுக்க அதிரடி நடவடிக்கை

திருமலை மலைப்பாதை விபத்துகளை தடுக்க அதிரடி நடவடிக்கை

திருப்பதி:திருமலை, மலைப்பாதையில் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க, திருப்பதி தேவஸ்தானம், ஜூன், 1ம் தேதி புதிய நடைமுறைகளை அமல்படுத்த உள்ளது.திருமலைக்கு வரும் தனியார் ஜீப் மற்றும் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. மற்ற மாநில வாகனங்களில் வருபவர்களும், சாதாரணமான சாலையில் வேகமாக செல்வது போலவே, மலைப்பாதையில் ஓட்ட முயல்வது தான் பிரச்னைக்கு முதல் காரணம். ஏமாற்றும் ஜீப் ஓட்டுனர்கள்தேவஸ்தானம் சார்பில்,சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதித்தாலும், மலைக்கு செல்லும் வாகனத்தின் நிலை, ஓட்டுனரின் நிலை, உரிமம் மற்றும் தினமும், மலைக்கு வந்து செல்பவரா ஆகியவற்றை ஆராய்வதில்லை. வரி செலுத்தினால் போதும் என்று, பணத்தை வாங்கிக் கொண்டு, விட்டு விடுகின்றனர். எட்டு பேருக்கு மேல், ஜீப்பில் பயணம் செய்யக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், ஜீப் ஓட்டுனர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு, சோதனை சாவடியை நெருங்கும் போது, வாகனத்தில் கூடுதலாக உள்ள பயணிகளை இறக்கி விட்டு, சோதனைச் சாவடியை தாண்டி நிற்குமாறு கூறுகின்றனர். வாகனம், சோதனைச் சாவடியை தாண்டிய பிறகு மீண்டும் ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். தனியார் வாகன ஓட்டுனர்கள், மலைப் பாதையில் வாகனம் ஓட்டிய முன் அனுபவம் இல்லாததால், மிக வேகமாக செல்கின்றனர். மலைப் பாதையின், 26வது வளைவிற்கு முன், ஒரு வேகத் தடை உள்ளது. கடந்த, 27ம் தேதி, மலைப் பாதையில் சென்ற ஜீப் ஓட்டுனர், இந்த வேகத் தடையை கவனிக்கவில்லை. இதனால், ஜீப் கவிழ்ந்து, இரண்டு பேர் இறந்தனர்.

திருமலைக்கு செல்லும் வாகனங்களின் நிலை, ஓட்டுனரின் தகுதியை சோதனை செய்யும் போலீசாரில் சிலர், மாமூல் வாங்கிக் கொண்டு, முழுமையாக சோதனை செய்யாமல் அனுப்பி விடுகின்றனர். இவர்கள், வாகன ஓட்டுனர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால், இனிமேல், இப்படி ஒரு விபத்து ஏற்படாமல் தடுத் திருக்க முடியும் என, தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர்.
புதிய நடைமுறை:திருப்பதியில் உள்ள அலிபிரி (ஏறும் வழி) சோதனைச் சாவடியில், இனி, வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒரு சீட்டு தரப்படும். அதில், வாகன ஓட்டுனர், சோதனைச் சாவடியில் நுழையும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் இருந்து, 35 நிமிடங்களுக்குப் பிறகு மட்டுமே திருமலைக்கு போய் சேர வேண்டும். இதே போல், திருமலையில் உள்ள கருடாத்திரி நகர் (இறங்கும் வழி) சோதனைச் சாவடியில், வழங்கப்படும் சீட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நேரத்தில் இருந்து, 40 நிமிடங்களுக்குப் பிறகு தான் திருப்பதியை அடைய வேண்டும். இந்த நிபந்தனை, அனைத்து மாநிலங்களிலும் இருந்து வரும் வாகனங்களுக்கும் பொருந்தும். மேலும், உள்ளூர் ஜீப்களுக்கு ஒரு நாளுக்கு, மூன்று முறை மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த நிபந்தனையை மீறுபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்.

வழி காட்டிய பேருந்துகள்
கடந்த மாதம், திருமலைக்கு சென்ற அரசு பேருந்துகள் வரிசையாக விபத்துக்குள்ளாகின. அப்போது, பேருந்து ஓட்டுனர்களுக்கு இதுபோல், குறிப்பிட்ட வேக கட்டுப்பாட்டு நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதை மீறுபவர்கள் மீது, தேவஸ்தானம் கடும் நடவடிக்கையை எடுத்தது. இதற்குப் பின் பேருந்து விபத்து நடக்கவில்லை. அதே நிபந்தனை, தற்போது தனியார் வாகனங்களுக்கும் அமல் செய்யப்பட்டுள்ளது. டூவீலர்களுக்கும் வேக கட்டுப்பாடு:திருப்பதி  திருமலை மலைப்பாதையில் பயணம் செய்யும் இருசக்கர வாகனங்களுக்கும், தேவஸ்தானம் வேக கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது என, பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி, அசோக்குமார் தெரிவித்தார்.திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல, இருசக்கர வாகனங்களுக்கு, 30 நிமிடங்களும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்ல, 40 நிமிடங்களும் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு சோதனைச் சாவடியில் ஒரு டோக்கன் வழங்கப்படும். அதில், இருசக்கர வாகனம், சோதனைச் சாவடியில் நுழையும் நேரமும், சேர வேண்டிய நேரமும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.குறிப்பிட்ட காலத்திற்கு முன் வந்து சேரும் வாகனங்களுக்கு, இனிமேல், மலைப்பாதையில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !