உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில்களில் அக்னி வசந்த உற்சவம்!

திரவுபதியம்மன் கோவில்களில் அக்னி வசந்த உற்சவம்!

காஞ்சிபுரம்: திருவள்ளூர் மாவட்டங்களில் திரவுபதியம்மன் கோவில்களில் அக்னி வசந்த உற்சவம் கோலாகலமாக நடந்தது. வீரமங்கலம்: பஞ்சபாண்டவ சமேத திரவுபதியம்மன் கோவிலில், கடந்த மாதம், 20ம் தேதி கொடியேற்றத்துடன் தீ மிதி விழா துவங்கியது. 23ம் தேதி வில் வளைப்பு, அதை தொடர்ந்து ராஜசுய யாகம், பகடை துயில், அர்ஜுனன் தபசு உள்ளிட்டவையும், கடந்த, 30ம் தேதி, ஆநிரை கவர்தல் நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று காலை, 10:00 மணிக்கு, கோவில் முன்பாக அர்ஜுனன் மண் சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. அர்ஜுனன், பீமன் வேடமணிந்த கலைஞர்கள், பதினெட்டாம் போர் நிகழ்த்தினர். மாலையில், கடந்த, 10 நாட்களாக காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள், தீக்குண்டத்தில் இறங்கி அம்மனை வழிபட்டனர். விழாவில், வீரமங்கலம், பந்திகுப்பம், மரிக்குப்பம், ராமராஜ் கண்டிகை, தாமனேரி, பால்ராஜ் கண்டிகை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 5,000 பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதே போல், பாலாபுரம் அருந்ததி கிராமத்திலும் நேற்று, மாத்தம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது. இன்று பலி சுத்தி நிகழ்ச்சி நடக்கிறது.

செவிலிமேடு: காஞ்சிபுரம் அடுத்துள்ள செவிலிமேடு திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த மகாபாரத பெருவிழா, கடந்த மாதம், 12ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் பல்வேறு தலைப்புகளில், மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகம், திரவுபதி அம்மன் மற்றும் உடனுறை தர்மராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடந்தது. இதில், 15ம் நாள் உற்சவத்தில், அர்ஜுனன் தபசு ஏறும் நிகழ்ச்சி நடந்தது. 22ம் நாள் உற்சவமான நேற்று காலை, 9:30 மணிக்கு, துரியன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, கண்டுகளித்தனர். மாலை, 5:00 மணிக்கு, தீ மிதி திருவிழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பகுதி மக்கள் செய்திருந்தனர்.

திருத்தணி: திருத்தணி நகராட்சி, 20 வார்டு மேல் திருத்தணியில் அமைந்துளளது திரவுபதி அம்மன் கோவில். இந்தாண்டு தீ மிதி திருவிழா, கடந்த மாதம், 16ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு சந்தனக் காப்பு, மதியம் மகாபாரத சொற்பொழிவு, மாலை அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று தீ மிதி திருவிழாவை ஒட்டி, காலை, 8:30 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, 750க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர். தொடர்ந்து வாண வேடிக்கை மற்றும் இரவு நாடகம் நடந்தது.

செய்யூர்: வயலூர் நெற்குணம் கிராமத்தில், திரவுபதி அம்மன் ஆலயத்தில், தீ மிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ளது வயலூர் நெற்குணம். இங்கு, பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவை ஒட்டி தினமும் மாலையில் மகாபாரத சொற்பொழிவும் இரவு நாடகமும் நடைபெற்றது. கடந்த, 1ம் தேதி இரவு அர்ஜுனன், கிருஷ்ணன், திரவுபதி வீதி உலா நிகழ்ச்சியும், 2ம் தேதி காலை தபசு நிகழ்ச்சியும், அன்று மாலை தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது.
விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டு தீ மிதித்தனர். - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !