உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பியன்மாதேவியில் சிதிலமடைந்துள்ள சோழர் கால கோவில்!

செம்பியன்மாதேவியில் சிதிலமடைந்துள்ள சோழர் கால கோவில்!

நாகப்பட்டினம்: சோழப் பேரரசியரால் கட்டப்பட்ட கோவில், பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. நாகையில் இருந்து, திருக்குவளை செல்லும் வழியில், செம்பியன்மாதேவி கிராமம் உள்ளது. தஞ்சையை ஆட்சி செய்த, கண்டராதித்த சோழனின் பட்டத்தரசி, செம்பியன்மாதேவியால் இந்த ஊர் நிர்மாணிக்கப்பட்டதால், அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இக்கிராமத்தில், சோழப் பேரரசி செம்பியன் மாதேவியால், அழகிய அம்பிகை பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் கட்டப்பட்டது. கிராமத்தை நிர்மாணித்து, கோவிலையும் கட்டிய செம்பியன் மாதேவி, கோவில் பராமரிப்புக்காக, விவசாய நிலங்கள், கட்டடங்கள், நகைகளை தானமாக அளித்தார். கி.பி., 981ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கோவில், தற்போது அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 1959ம் ஆண்டு, மே 13 ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலப் போக்கில், கோவில் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்ததால், வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்தது. சில ஆண்டுகளுக்கு முன், கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த, அரசு, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. இதையடுத்து, பணிகள் வேகமாகத் துவங்கியது; துவங்கிய வேகத்தில், நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது, கோவில் பராமரிப்பின்றி, சிதிலமடைந்து வருகிறது. பொக்கிஷமாகப் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய, வரலாற்றுச் சின்னமான சோழர் கால கோவிலை, சீரமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !