பழமையான கண்டியம்மன் கோவில் புனரமைப்பு
உடுமலை:ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில், பல ஆண்டுகளுக்கு பின்பு புனரமைப்பு செய்யப்பட்டு, தினசரி மூன்று கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. உடுமலை அருகேயுள்ள சோமவாரப்பட்டியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் உள் ளது. சிறப்பு அம்சமாக மூன்று கருவறைகளும், இரண்டு கோபுரங்களும் உள்ளன. ஒரு கர்ப்ப கிரகத்தில் பெரிய கண்டியம்மன் சிலையும், மற்றொரு கர்ப்ப கிரகத்தில் உற்சவர் சிலையும், மூன்றாவது கர்ப்ப கிரகத்தில், சின்ன கண்டியம்மன் சிலையும் உள்ளன. கோவில் எதிரே ஒரே கல்லால் ஆன தீப கம்பம் உள்ளது. இக்கோவில் "கற்றலி முறையில், கல்தூண்களாலும், மேற்கூரை முழுவதும் கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கோவில் காலப்போக்கில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்பட்டது. தற்போது கோவிலில் புனரமைப்பு பணிகள் நன்கொடையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது;கோபுரத்தில் கலசங்கள் வைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்பு, கடந்த மாதம் 21ம் தேதி முதல் சிறப்பு ஹோம பூஜைகள் இரண்டு வாரகாலமாக நடந்து வருகிறது. இதற்காக கேரளாவில் இருந்து அர்ச்சகர்கள் வரவழைக்கப்பட்டு, மூன்று காலமும் ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவில் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு, கோவிலை சுற்றிலும் ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன;கலசங்கள் புதியதாக வைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இன்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8:00 மணிக்கு லட்சுமி ஹோமம், 11:00 மணிக்கு சிந்தாமணி ஹோமம், மதியம் 1:00 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனையும்; மாலை 5:30 மணிக்கு விசேஷ சாந்தி, இரவு 7:00 மணிக்கு பகவதி சேவா, 9:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனையும் நடக்கிறது. நாளை காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 8:00 மணிக்கு சூத்த ஹோமம் 11:00 மணிக்கு சர்பராய பூஜையும், மதியம் 1:00 மணிக்கு மகா பூர்ணாகுதி, மாலை 5:30 மணிக்கு சர்வாரிஷ்ட் சாந்தி, இரவு 7:00 மணிக்கு பகவதி சேவா, 9:00 மணிக்கு அபிஷேகமும் நடைபெறுகிறது. வரும் 14ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 8:00 மணிக்கு கஜபூஜை, 11:00 மணிக்கு கும்பஸ்த விமான ஸ்தானம், 1:00 மணிக்கு பிரம்ம கலசம், அபிஷேகம், 4:00 மணிக்கு யானை ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுந்தரேசன், மற்றும் கஞ்சிமலை, கருணம்பாள் தலைமையிலான விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக ஒரு கால பூஜை மட்டும் நடத்தப்பட்டு வந்த கண்டியம்மன் கோவிலில், தினசரி யாக பூஜைகளுடன் மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.