வில்லியனூர் பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்!
புதுச்சேரி: வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று காலை நடந்தது.வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, ரூ.60 லட்சம் செலவில், 40 அடி உயரம், 15 அடி அகலம் கொண்ட புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று காலை நடந்தது. திருக்கோவிலூர் ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரியார் மங்களாசாசனம் செய்து, பிரதிஷ்டை செய்தார். முதல்வர் ரங்கசாமி வடம் பிடித்து, தேர் வெள்ளோட்டத்தைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்,எம்.எல்.ஏ.,க்கள் தேனீ ஜெயக்குமார், நமச்சிவாயம், கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன் மற்றும் வாரியத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தது.இதற்கான ஏற்பாடுகளை தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் சிறப்பு அதிகாரி ஹரிஹரி நமோ நாராயணா மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.