திருப்பரங்குன்றம் கோயிலில் கனி மாற்று திருவிழா!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில், உச்சி கருப்பண சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கனிமாற்று விழா நடந்தது.இக்கோயிலில், சுவாமிக்கு உருவம் கிடையாது. அதற்கு பதில், நான்கரை அடி உயரத்தில் இரண்டு பெரிய அரிவாள், இருபுறமும் தூண்கள் உள்ளன. பக்தர்கள் வழங்கிய பித்தளை, வெண்கல மணிகளும் அதிகம் உள்ளன. இவற்றையும், அருகிலுள்ள பாறையுமே சுவாமியாக வழிபடுகின்றனர். இங்கு படைக்கப்படும் தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை, கோயில் எல்லைக்குள் சாப்பிட்டு முடித்து விடவேண்டும். வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஜூனில் நடக்கும் கனி மாற்று திருவிழா நேற்று நடந்தது.திருப்பரங்குன்றம் கோயில் வீட்டிலிருந்து ஆள் உயர மாலை, 3000 வாழைப்பழங்கள், மாம்பழம், பலாச்சுளைகள் தலா ஆயிரம் ஆகியவற்றை, பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று சுவாமிக்கு படைத்தனர்.