திருமலையில் தனியார் பீடம் சார்பில் நடக்கும் யாகம்!
திருப்பதி: திருமலையில், ஆகம விதிகளுக்கு புறம்பாக, தனியார் மடம் சார்பில், ஒன்பது நாள் யாகம் நடத்தப்பட்டு வருவது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஏழுமலையான் கோவிலின் தலைமை அர்ச்சகர் உட்பட, பலரும், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருமலையில் தேவஸ்தானம் தவிர, மற்றவர்கள், பூஜைகள், யாகங்கள் செய்ய அனுமதிஇல்லை.
மறுப்பு: திருமலையில், தனியார் மடங்கள், யாகம் நடத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று, கடந்த, 2004ம் ஆண்டு, திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு எடுத்தது. கடந்த ஆண்டு, குற்றாலம் பீடாதிபதி, திருமலையில் யாகம் நடத்த அனுமதி கேட்ட போது, மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, திருப்பதியில் உள்ள வேத பாடசாலை வளாகத்தில், யாகம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த, ஒரு தனியார் மடம் சார்பில், திருமலையில், ஒன்பது நாள் சாந்தி யாகம், கடந்த, 8ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில், அந்த மடத்தின் பீடாதிபதி, மகாநந்த கோபால் சுவாமி மகராஜ் பங்கேற்றுள்ளார்.
பூ வைப்பதில்லை: திருமலையில், நான்கு மாட வீதிகளில், ஏழுமலையானின் வாகன சேவைகள் மட்டுமே, வலம் வர அனுமதி உள்ளது. ஆனால், யாகம் நடத்தி வருபவர்களும், சாதுக்களும், பெரிய கலசங்களுடன், மாட வீதியில் ஊர்வலமாக சென்று, யாகம் நடந்த கல்யாண மண்டபத்தை அடைந்துள்ளனர். இந்த ஊர்வலத்தில்,தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர், பாபி ராஜுவும் பங்கேற்றார். இது குறித்து, தேவஸ்தான தலைமை அர்ச்சகர், ரமண தீட்சிதர் கூறியதாவது: திருமலையில், பூக்கும் ஒவ்வொரு மலரும், ஏழுமலையானுக்கு மட்டுமே, சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. அதனால் தான், திருமலையிலும், கோவிலுக்குள்ளும் பெண்கள் பூ வைத்துக் கொள்வதில்லை. விவரம் தெரியாத பெண்கள் தான், திருமலையில், விற்கப்படும் பூவை வாங்கி தலையில் வைத்து கொள்வர்.
தகவல் தெரியாது: இந்த அளவுக்கு விதிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் திருமலையில், ஆகம விதிகளுக்கு புறம்பாக, தனியார் மடம் சார்பில், சாந்தி யாகம் நடந்து வருவது பற்றி, ஆகம பண்டிதர்கள், ஆச்சாரியார்கள், ஜீயர்களுக்கு தகவல் தெரியாது. இது குறித்து, அர்ச்சகர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, விசாகப்பட்டினத்தை சேர்ந்த, ஸ்ரீ சாரதா மடத்தின் பீடாதிபதி ஸ்வரூபானன் தேந்திர சுவாமிகள் கூறுகையில், ""திருமலையில், தனியார் மடங்கள் பூஜைகள், யாகம் செய்வது அபச்சாரம், என்று விமர்சனம் செய்துள்ளார்.