சோழர்களின் கலைகள் களவு போவதை தமிழர்கள் கண்டு கொள்ளவில்லை!
சென்னை: சோழர்களின் கலைகள் களவு போவதை பற்றி, தமிழர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர், என, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார். பிரம்ம கான சபா மற்றும் "நல்லி சார்பில், கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை, நாரத கான சபாவில், நேற்று நடந்தது. இதில், நல்லி குப்புசாமி செட்டி, ஒலிப்புத்தகத்தை வெளியிட, நடிகை சுகாசினி மணிரத்னம், எழுத்தாளர்எஸ். ராமகிருஷ்ணன், கல்கியின் பேத்தி சீதா ரவி, பெற்று கொண்டனர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது: தமிழர்கள், வரலாற்றின் பெருமை பேசுவோராக மட்டுமே உள்ளனர். அதன்படி, நடப்பதில்லை. பொன்னியின் செல்வன் நூலை படிப்பதன் மூலமே, சோழர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும். முகலாய சாம்ராஜ்யத்துக்கு இணையானது, சோழர்களின் ஆட்சி. கோவிலில் உள்ள சிலைகளின் கலை அழகை பார்க்காமல், அவற்றில் குங்குமம், வியூதி கொட்டி பாழாக்குகிறோம். தமிழகத்தில், பலர் தமிழில் எழுதுவதையும், பேசுவதையும் மறந்து வருகின்றனர். எங்களுக்கு அது வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழர்கள் சோழர்களின் கலைகளை உணராமல் இருக்கின்றனர். கலைகள் களவு போவது பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தயாரிப்பாளர் வெங்கடராமன், இயக்குனர் பம்பாய் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.