வாசுதேவநல்லூர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சிவகிரி: வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் (எ) சிந்தாமணிநாதர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 22ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. இக் கோயிலில்ஆனித்திருவிழா நேற்று (14ம்தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பால், தயிர், நெய், பன்னீர், மஞ்சள்பொடி உட்பட 18 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் முன்புள்ள கொடிமரத்தில் காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தீபாராதனை நடந்தது. விழாவில் வாசுதேவநல்லூர் டவுன் பஞ்., தலைவர் ஆறுமுகம், ஓய்வுபெற்ற நீதிபதி மாரியப்பபிள்ளை, கோயில் செயல் அலுவலர் அழகுலிங்கேஸ்வரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபுபாஸ்கரன், மண்டகபடிதாரர்கள் குருமலை சௌந்தராஜன், கொடிபட்டம் உபயதாரர் காந்திமதிநாதபிள்ளை, அனைத்து சமுதாய மண்டகபடிதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேசியம்பட்டி தொழிலதிபர் கணபதிதேவர் சார்பில் மதியம் அன்னதானம் நடந்தது. இரவு 8மணிக்கு பூங்கேடயத்தில் சுவாமி அம்மையப்பன் திருவிழா நடந்தது. ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர் திருவிழா நடக்கிறது. வரும் 22ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. 10ம் திருநாள் காலையில் தீர்த்தவாரி நடக்கிறது. 23ம்தேதி இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.