உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நித்யகல்யாண பெருமாள் கோவிலில் வரிசையில் காத்திருந்து தரிசனம்!

நித்யகல்யாண பெருமாள் கோவிலில் வரிசையில் காத்திருந்து தரிசனம்!

மாமல்லபுரம்: திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று வார விடுமுறை நாள் என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, வழிபட்டனர். ஆதிவராக பெருமாள் மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை கிராமத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், நித்யகல்யாண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாரை, தன் இடது தொடையில் மீது அமர்த்தி, நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். இத்தலத்தில், காலவ முனிவரின் 360 மகள்களை, தினம் ஒருவர் வீதம், சுவாமி திருமணம் செய்ததால், திருமண தடை, ராகு, கேது, சுக்ர நிவர்த்தி பரிகார தலமாக, கோவில் விளங்குகிறது. மேலும், 108 வைணவ திருத்தலங்களில், 62வது தலமாக புகழ் பெற்றது. இறைவனை, திருமங்கையாழ்வார் போற்றி பாடிஉள்ளார்.

திருமண தடை: கோவிலில், உட்புறத்தில், நித்யகல்யாண பெருமாள், கோமளவல்லி தாயார், ஆண்டாள், அரங்கநாதர், அரங்கநாயகி, கருடன் ஆகியோர் சன்னிதிகள், வெளிப்புறத்தில், ஆஞ்சநேயர் சன்னிதி ஆகியவை உள்ளன. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதியினர், திருமணத் தடை, பிற பரிகார நிவர்த்திக்காக, இங்கு வருகின்றனர். தற்போது தரிசனத்திற்காக, பக்தர்கள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வார இறுதி, அரசு விடுமுறை, பண்டிகை ஆகிய நாட்களில், ஏராளமானோர் வருகின்றனர். வார விடுமுறை நாளான நேற்று, காலை 8:00 மணியிலிருந்தே, பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. கோவில் வெளி வளாகம் வரை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !