உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் நுழையாத கருப்பசாமி கோவில்: நீர் வற்றியதால் வழிபாடு!

பெண்கள் நுழையாத கருப்பசாமி கோவில்: நீர் வற்றியதால் வழிபாடு!

மேட்டூர்: மேட்டூர் அணைக்குள், மூழ்கியிருந்த கருப்பசாமி கோவில், தற்போது, வெளியே தெரிகிறது. இந்த கோவிலில், சிலையை தேடுவதற்காக, மண்ணை தோண்டிய போது, ஆங்கிலேயர் கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேட்டூர் தாலுகா, கீரைக்காரனூர் கிராமம், மேட்டூர் அணை கரையோரம் அமைந்துள்ளது. மேட்டூர் அணை கட்டும் முன், பொதுமக்கள், அப்பகுதில் கருப்பசாமிக்கு, சிலை வைத்து வழிபாடு செய்தனர். 1934 ல், மேட்டூர் அணை கட்டிய பின், கருப்பசாமி கோவில், நீர்பரப்பு பகுதிக்குள் மூழ்கியது. அணை நீர்மட்டம், 100 அடியை எட்டும் போது, கருப்பசாமி கோவில், நீரில் மூழ்கி விடும். அணை நீர்மட்டம், 16.800 அடியாக சரிந்ததால், நீரில் மூழ்கியிருந்த கருப்பசாமி கோவிலை, கீரைக்காரனூர் பக்தர்கள், சீரமைத்து வழிபாடு செய்தார். கருப்பசாமி சிலை அருகே, நிலத்தில் வேறு சிலைகள் இருக்க கூடும் என்பதால், அந்த இடத்தை, பக்தர்கள் தோண்டினர். மண்ணுக்குள், 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த, விக்டோரியா மகாராணி உருவம் பதித்த அணா, அரையணா, காலணா நாணயங்கள் கிடைத்தன. மொத்தம், 23 நாணயங்களை எடுத்த பக்தர்கள், பூசாரி மாணிக்கத்திடம், அவற்றை ஒப்படைத்தனர். "19ம் நூற்றாண்டில், கீரைக்காரனூர் பகுதியில், திருஷ்டி கழிப்பதற்காக, காசுகளை தலையை சுற்றி, கோவிலில் வீசுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த காசுகள்தான் தற்போது மண்ணில் இருந்து கிடைத்துள்ளன என, பக்தர்கள் தெரிவித்தனர். பொட்டனேரி வருவாய் ஆய்வாளர் செல்லத்துரை, கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் ஆகியோர், கோவிலை பார்வையிட்டு, மாணிக்கத்திடம் இருந்த காசுகளை மீட்டு, தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அந்த காசுகள், அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும் என, வருவாய்துறையினர் தெரிவித்தனர். பழங்கால காசு கண்டெடுக்கப்பட்ட கருப்பசாமி கோவிலுக்குள், ஆண்கள் மட்டுமே சென்று, வழிபட வேண்டும் என்ற கட்டுப்பாடு, இன்னமும் உள்ளது. இதனால், பெண் பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் நின்று, கருப்பசாமியை, வழிபட்டு திரும்புகினறனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !