உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் பத்மநாபபுரம் அரண்மனையை இணைக்க முயற்சி!

உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் பத்மநாபபுரம் அரண்மனையை இணைக்க முயற்சி!

தக்கலை: உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் பத்மநாபபுரம் அரண்மனையை இணைக்க கேரள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக கேரள தொல்லியல் ஆய்வு இயக்குநர் டாக்டர் பிரேம்குமார் பேட்டியளித்துள்ளார். பத்மநாபபுரம் அரண்மனையில் செயல்பட்டு வரும் அருங்காட்சியகம் சமீபத்தில் சுமார் 40 லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது. அப்பணி நிறைவடைந்ததையொட்டி அருங்காட்சியகம் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு நேற்று முதல் இயங்கத் துவங்கியுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. அரண்மனை கண்காணிப்பாளர் சரத் சந்திரன் தலைமை வகித்தார். ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். கேரள தொல்லியல் ஆய்வுத் துறை இயக்குநர் டாக்டர் பிரேம்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதன் பின் நிருபர்களிடம் கூறியதாவது:  பத்மநாபபுரம் அரண்மனையை திரைப்படத் துறையினர் திரைப்படத்திற்காக பயன்படுத்தும்போது சில சிதைவுகள் ஏற்பட்டுள்ளன. அதை சரி செய்வதோடு எதிர்காலத்தில் திரைப்பட பிடிப்புக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்மண்டபத்தில் முதற்கட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வரும் நவராத்திரியின்போது நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். தற்போது அரண்மனையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுமார் 2 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவிலான பணிகள் குறித்த பரிந்துரை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பணிகள் முறையாகவும் தரமாகவும் செய்யும் வகையில் ஒவ்வொன்றாக மேற்கொள்ளப்படும். உலக பிரசித்தி பெற்ற மரத்தால் ஆன இந்த அரண்மனையில் தற்போது பயனற்ற நிலையில் ஏராளமான மரப் பலகைகள் உள்ளன. அவற்றை ஏலமிட உத்தேசிக்கப்பட்டிருந்தது. அத்திட்டத்தை கைவிட்டு பலகைகளை இங்கு பல விதங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஆன்லைன் டிக்கட் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட ஹரப்பா, மொஹஞ்சதாரோ நாகரீகத்தில் காணப்பட்ட இரண்டாயிரம் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் சுமார் 300 சின்னங்கள் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவை இங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. அவற்றை பற்றி ஆய்வு செய்த பின்பு அருங்காட்சியகத்தில் 3 மாதங்களுக்குள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்படும். இது வரை அரண்மனையின் வரலாறு குறித்து மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது தமிழிலும் புத்தகம் வெளியிட தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் தமிழ் புத்தகம் வரும் நவராத்திரியின்போது வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் கேரளாவில் உள்ள இடைக்கல் குகையை இணைக்க கேரள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக டாக்டர் எலிசபெத் தாமயி என்பவரை நியமித்து ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !