உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடந்தை கோவிலில் வாகன நிறுத்துமிடம் அவசியம் பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருவிடந்தை கோவிலில் வாகன நிறுத்துமிடம் அவசியம் பக்தர்கள் எதிர்பார்ப்பு

மாமல்லபுரம்: திருவிடந்தை கோவிலுக்கு வரும், பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதி இன்றி, சாலையிலேயே ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்தை, விரைந்து செயல்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை கிராமத்தில், புகழ்பெற்ற நித்யகல்யாண பெருமாள் கோவில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருமண தடை உட்பட பல்வேறு தோஷங்களுக்கு முக்கிய பரிகார தலமாகவும், 108 வைணவ திருத்தலங்களில், 62வது தலமாகவும் புகழ்பெற்றது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தோஷ பரிகாரங்களுக்காக, ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

நெரிசல்: குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, வார இறுதி நாட்களில், ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர். இதனால், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், பக்தர்கள் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. ஆனால், இங்கு வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாததால், கோவில் அருகில், சாலையோர குறுகிய பகுதியில், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால், கோவில் அருகில் கடும் நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, கோவிலின் பின்புறம், கோவிலுக்கு சொந்தமான, ஒரு ஏக்கர் நிலத்தில், வாகன நிறுத்துமிடம் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன், நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அங்கு வாகனங்களை நிறுத்தினால், கோவில் முன்புற கடைகளில் வியாபாரம் பாதிக்கலாம் என, கருதிய உள்ளூர் வியாபாரிகள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், பக்தர்கள் அவதி தொடர்கிறது. எனவே, கோவில் நிர்வாகம், பக்தர்களின் நலன் கருதி, வாகன நிறுத்துமிட பிரச்னைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !