திருவிடந்தை கோவிலில் பிரசாத விற்பனை உரிமம் ரூ.15 லட்சத்திற்கு ஏலம்
மாமல்லபுரம்: திருவிடந்தை கோவிலில், பிரசாத விற்பனை உரிமம், 15 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. திருவிடந்தையில் நித்யகல்யாணப் பெருமாள் கோவில் உள்ளது. திருமண தடை உட்பட, பல்வேறு தோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குவதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு, பிரசாத பொருட்கள், தெய்வ திருவுருவ படங்கள் ஆகியவை விற்க, ஆண்டுதோறும், கோவில் நிர்வாகம் சார்பில், விற்பனை உரிம ஏலம் விடப்படுகிறது. நடப்பு ஆண்டிற்கான மறைமுக மற்றும் பொது ஏலம், சமீபத்தில் நடந்தது. இதில், பிரசாத பொருட்கள் விற்பனை உரிமம், 15.09 லட்சம் ரூபாய்க்கும், பட விற்பனை உரிமம், 1.65 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது. ஸ்தலசயன பெருமாள் கோவில்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று ஏலம் நடந்தது. இதில், பிரசாத பொருட்கள் விற்பனை உரிமம், 36,900 ரூபாய்க்கும், அர்ச்சனை பொருட்கள் விற்பனை உரிமம், 17,500 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது.