ஒப்பிலியப்பன் கோவிலில் மழைவேண்டி வேதமந்திர பாராயணம்
கும்பகோணம்: ஒப்பிலியப்பன்கோவில் வேங்கடாசலபதி சுவாமி கோவிலில் மழைவேண்டி நேற்று வேதமந்திர பாராயணமும், சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக திருப்பதி, திருவிண்ணகர், பூலோக வைகுண்டம் என்றெல்லாம் போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோவில் ஸ்ரீவேங்கடாசலபதி சுவாமி கோவில் உள்ளது. இங்கு தமிழக முதல்வர் உத்தரவுப்படி மழை வேண்டி நேற்று காலை வேதமந்திர பாராயணமும், சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. முன்னதாக காலை 7.45 மணிக்கு பகவத் பிரார்த்தனை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை 8 மணி முதல் தொடர்ந்து 1 மணி நேரம் வருண சூக்த வேத மந்திர பாராயணமும், வருண காயத்ரி மந்திர பாராயணமும் திரளான பட்டாச்சார்யார்களால் நடந்தது. பின் தமிழகத்தில் மழை வேண்டி சிறப்பு ஹோமம் நடந்தது. 10 மணி முதல் 10.30 மணி வரை மழை வேண்டி பதிகங்கள் சொல்லப்பட்டது. அதன்பின் நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்யங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற மழை ராகங்களை கொண்டு வாசிக்கப்பட்டது. பின் மூலவர் வேங்கடாசலபதி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பகல் 1 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் பரணீதரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.