சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
சிவகங்கை:சிவகங்கை, சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவகங்கை, மஜீத் ரோட்டில் உள்ள சனீஸ்வரர் கோயில் புனரமைப்பு பணி நடந்தது. கும்பாபிஷேக பணிகள், ஜூன் 19ல் விநாயகர், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.இரண்டு, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. மூன்றாம் நாளான ஜூன், 21, காலை 5 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையுடன், கும்பாபிஷேகம் துவங்கியது. காலை 8 மணிக்கு கடம்புறப்பாடு, விமான கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, காலை 9.55 முதல் 10.25 மணிக்குள், மூலகோபுர கலசத்தில், கண்ணப்ப சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். கர்நாடகா குருசிவசுக்ஞான மூர்த்தி சுவாமி தலைமை வகித்தார். சிவகங்கை சமஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், மன்னர் கல்வி நிறுவன முகவாண்மை குழு உறுப்பினர் மகேஷ்துரை முன்னிலை வகித்தனர். விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாநில சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருப்பணி குழு தலைவர் ராமநாதன், செயலாளர் பாபு,ஆலோசகர் வேலுச்சாமி, பொருளாளர் ரகுராமன்,கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.