பெரியகோவிலில் மழை வேண்டி யாகபூஜை
தஞ்சாவூர்: மழை பெய்து, விவசாயம் செழிக்க தஞ்சை பெரியகோவிலில் பிரகதீஸ்வரர் ஸ்வாமி முன், ஜூன், 21 மூன்று மணி நேரம் சிறப்பு யாகபூஜை வெகுவிமரிசையாக நடந்தது. இதில், பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தஞ்சையில், ஆயிரம் ஆண்டுக்கு முன், முதலாம் மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய, உலகப்பிரசித்தி பெற்ற பெரியகோவிலில் மழை பொய்க்கும் நேரங்களில் சிறப்பு யாகபூஜை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல, உலக நன்மைக்காகவும் விவசாயம் பெருகவும் மழை வேண்டி ஜூன், 21 சிறப்பு யாகபூஜை செய்யப்பட்டது. இதில், 3.66 மீட்டர் உயரம் கொண்ட லிங்க வடிவிலான பிரகதீஸ்வரர் முன், யாகக்குண்டம் அமைத்து ரோஜா, தாமரை, முல்லை, பிச்சி, அரளி பூக்கள் உள்பட மலர்களாலும், வாழைப்பழம், ஆரஞ்சு, கொய்யாப்பழம், முந்திரி, மாதுளம், திராட்சை உள்ளிட்ட பழங்களாலும், மிளகு, ஏலக்காய், திப்பிலி போன்ற வாசனை திரவியங்களாலும், சிறப்பு பூஜை நடந்தது. யாகக்குண்டத்தைச் சுற்றி பல்வேறு மலர்களை வைத்து அலங்கரித்து வைத்திருந்தனர். மழை வேண்டி, 26 வகை பொருட்களால் பூஜை செய்தனர். இதில், பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனையும், வர்ணபூஜை, ருத்ர ஹோமம், ருத்ர பூஜை, வாராபிஷேகமும் செய்யப்பட்டது. பின்னர், மேகக்குறிச்சி ராகத்தில் 70 திருமுறை பாடல்கள் ஒப்பித்தலும், அமிர்தவர்ஷினி ராகத்தில் நாதஸ்வரம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி வரை 3 மணி நேரம் சிறப்பு யாக பூஜை நடந்தது. இதில், 10 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், வேதிகார்ச்சனை, 11 மணிக்கு சாந்தி ஹோமம், வர்ண சக்தி ஜெபபாராயணம், ருத்ர பாராயணம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 11:30 மணிக்கு மழை வேண்டி சுந்தரர், சம்பந்தர் பாடிய பதிகங்களை ஓதுவார்கள் பாடினர். ஆனந்தபைரவி, அமிர்தவர்ஷினி ராகங்களை கலைஞர்கள் இசைத்தனர். மதியம் 1 மணிக்கு பிரகதீஸ்வரர் ஸ்வாமிக்கு மஹா ஆராதனையுடன் சிறப்பு பூஜை நிறைவடைந்தது. இதில், நூற்றுக்கணக்கான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.