அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அகழி கோவில்!
கொடுவாயில், வெள்ளை கற்களால், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன், அகழி அமைப்பில் அமைந்துள்ளது கோவர்த்தனாம்பிகை உடனமர் நாகேஸ்வர சுவாமி கோவில். கி.பி., 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிபட்டு வந்த தலம் எனவும், கல்வெட்டு ஆய்வில் தெரியவருகிறது. சேக்கிழார் அவதரித்த திருநாகேஸ்வரத்தில், பிறவியிலேயே கண் இழந்த அந்தகன் ஒருவர், ஏகாம்பர நாதரை வழிபட்டு கண் வேண்டினார். வழிபாட்டில் மகிழ்ந்த சுவாமி, ஒரு கண்ணை திருநாகேஸ்வரத்தில் வழங்கிவிட்டு, மறு கண்ணை கொங்கு நாட்டில் உள்ள கொடுவாயில் எழுந்தருளியிருக்கும் திருநாகேஸ்வரரை வழிபட்டு பெறும்படி கூறியுள்ளார். அதன்படி, கொடுவாய் வந்து, மற்றொரு கண்ணை பெற்றுள்ளார். அதனால், இக்கோவில் மற்றொரு திருநாகேஸ்வரம் என கூறப்படுகிறது.
பெயர் காரணம்: பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் நடந்தபோது, போர் செய்ய இயலாத, தாராபுரம் மன்னனிடம், பெண் உருவில் இருந்த அர்ச்சுனன், "ஆயுதங்களை கொடு என்று கேட்ட இடம், காலப்போக்கில் மருவி கொடுவாய் ஆனதாகவும், தாராபுரம் நாட்டின் நுழைவாயிலாக இருந்த குடவாய் பகுதியே, தற்போது கொடுவாய் ஆனது என்பதற்கான சான்றுகளும் உள்ளன. முட்காடுகள், புதர்கள் நிறைந்த பொங்கலூர் நாட்டில், வேடர், வேட்டுவர், கோடாங்கிகள், குறவர் உள்ளிட்டோர் அதிகம் வசித்து வந்த நிலையில், தாராபுரம் மன்னனுக்கு மனைவியாக வந்தவர், தனது தந்தையிடம் கலவரத்தை அடக்க வேண்டியதையடுத்து, சோழ மன்னன் பெரிய பெருமாள் என்பவர், படைகளுடன் வந்து கலவரத்தை அடக்கி விரட்டியடித்துள்ளனர். இதனால், கொடுவாய் எனவும் அறியப்படுவதாக வரலாற்று சான்றுகள் உள்ளன.
கட்டட கலை: நாகேஸ்வரர், அம்பாள் சன்னதிகள் இரண்டும், அகழி அமைப்பில் அமைந்துள்ளது. கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அமைப்பு உள்ளது. அஸ்திவாரத்துக்கு கீழ், பல நூறு அடிக்கு வெறும் மணல் மட்டுமே போடப்பட்டுள்ளது. அருகில், ஆறுகள் ஏதும் இல்லாத நிலையில், மணல் போட்டு அதன் மீது கற்கள் அடுக்கி, கோவில் அமைக்கப்பட்டுள்ளதும், கருவறை, மண்டப சுவர்களை சுற்றிலும், அகழி அமைக்கப்பட்டு, கற்களால் வடிகால் போல் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில், இதைச்சுற்றிலும் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்ததாக, செவிவழி செய்திகள் சொல்லப்படுகின்றன. இந்த அமைப்பு பழங்கால கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அஸ்திவாரம் இல்லாமல், மணல் மேல் கற்கோவில் அமைந்துள்ளதும், கோவில் அகழி அமைப்பில் உள்ளதும், ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு குறித்தும், கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்தால் பல செய்திகள் வெளியாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதேபோல், கோவிலை சுற்றிலும், பழங்கால கல்வெட்டுகள் அதிகளவு காணப்படுகின்றன. நவக்கிரக கோவில் புதுப்பிக்கும்போது, 250 லாரி மணல் மட்டுமே அஸ்திவாரமாக போடப்பட்டுள்ளதை பார்த்து, இப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
சிற்ப வேலைப்பாடு: கோவிலை சுற்றிலும் சிற்ப வேலைப்பாடுகள், யாழி அமைப்பு, அன்னபறவை, சுவாமி சன்னதி மேற்கூரையில், சந்திர, சூரிய கிரகணத்தை விளக்கும், பாம்பு பிடிக்கும் கதை, அம்பாள் சன்னதி முன், சுந்தரர் பாடியதையடுத்து, முதலை வாயிலிருந்து குழந்தை வெளியேறுவது, ஆடல் மகளிர் சிற்பங்கள் என அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன. பழங்கால அரசர்கள் போருக்கு செல்லும் முன், எதிரிகளை மந்தமடைய வைத்து, எளிதில் வெற்றி பெற, மந்தன், மந்தி, ஜெகஸ்டா தேவியான மூதேவியை வழிபட்டு, சென்றுள்ளனர். பெரிய அளவிலான ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இச்சிற்பம் இக்கோவிலில் உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 50 அடி உயர தீபஸ்தம்பமும் உள்ளது. இக்கோவிலில், மாப்பிள்ளை விநாயகர், மேற்கு பார்த்து சனீஸ்வரனுக்கு தனி சன்னதி, விஷ்னு, துர்க்கை, சண்டிகேஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், தெற்கு பார்த்து பைரவர், மேற்கு பார்த்து சூரியன், சந்திரன் சன்னதிகள் அமைந்துள்ளன. கருப்பராயன் கோவில் காவல் தெய்வமாக உள்ளது. அர்த்த மண்டபத்தில் சந்திரசேகர், சாரதாம்பாள், சூலத்தேவர், விநாயகர் உலோக சிலைகளும், கனகசபையில் நடராஜர் சிலைகளும் உள்ளன. தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. இம்மரத்தை ஆய்வு செய்தபோது, 1,200 வயதுடையது என கண்டறியப்பட்டுள்ளது. மரம் சாய்ந்து இருந்தாலும், பசுமை மாறாமல் உள்ளது. அருகிலேயே, மற்றொரு மரமும் வளர்ந்துள்ளது.
மணக்கோலம்: கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. லிங்க வடிவில் சுவாமி எழுந்தருளியுள்ளார். பெயரிலேயே நாகேஸ்வரம் அமைந்துள்ளதோடு, கோவிலுக்குள் புற்று உள்ளதால், ராகு, புத்தி தோஷ பரிகார பூஜை இங்கு சிறப்பு பெற்றதாகும். ஞாயிற்றுக்கிழமை மாலை, ராகு காலத்தில் பூஜை நடக்கிறது. சிவாலயங்களில் அம்பாள், இடதுபுறம் அமர்ந்திருப்பார். இக்கோவிலில் கோவர்த்தனாம்பிகை, வலதுபுறத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். மதுரையில் சுந்தரரேஸ்வரருக்கு வலது பாகத்தில் மீனாட்சி எழுந்தருளியிருப்பதுபோல், இங்கு அம்பாள் எழுந்தருளியுள்ளார்.
இந்த அமைப்பை பெற, அம்பாள், ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்து பெற்றதாகவும் வரலாறு உள்ளது. திருமணத்தின்போது, மாப்பிள்ளைக்கு வலது பாகத்தில் பெண் அமர்வதுபோல், அம்பாள் இங்கு அமர்ந்துள்ளதால், மணக்கோலத்திலேயே கோவில் அமைந்துள்ளது. இங்கு அம்பாளுக்கு தனி சக்தி உண்டு என்ற வரலாறும் உண்டு. திருமணம், தொழில் உள்ளிட்ட தடைகள் அனைத்தும் நீங்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.