மழைவேண்டி பாளை.,சிவன் கோயிலில் சிறப்பு யாகம்!
திருநெல்வேலி : மழைவேண்டி பாளை.சிவன் கோயில், நெல்லை ஜங்ஷன் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்பாள் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. விஜய வருடத்தில் பருவமழை பெய்து நாடு செழிக்க இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மழைவேண்டி யாகம் நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த 26ம் தேதி நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஜூன் 28 பாளை.திரிபுராந்தீஸ்வரர்(சிவன்) கோயிலில் ஜூன் 28 மழைவேண்டி சிறப்பு யாகம் நடந்தது. மகா கணபதி பூஜை, புண்ணியாகவாசனம், சுவாமிக்கு ஏகாதச ருத்ர ஜப பாராயணம், பர்ஜன்ய சாந்தி, வருண ஜெபம், வருண ‹க்த பாராயணம், மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி வைரவன் மற்றும் திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்தனர். இதுபோல், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில், ஜங்ஷன் வரதராஜபெருமாள் கோயிலிலும் மழைவேண்டி சிறப்பு யாகம் மற்றும் சுவாமி, அம்பாளுக்கு பூஜைகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.