ஓசூர் கோவிலில் மழை வேண்டி வர்ண ஜெபம்
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில், மழை வேண்டி ஜலகண்டேஸ்வரர் லிங்கத்துக்கு பக்தர்கள் தண்ணீர் ஊற்றி, சிறப்பு யாகம் செய்து வழிப்பட்டனர்.தமிழகம் முழுவதும் கடந்த இரண்டாண்டாக பருவமழை முற்றிலும் ஏமாற்றியதால் கடும் வறட்சி காணப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவில் மட்டும் கடந்த இரு ஆண்டாக பருவமழை முற்றிலும் பொய்த்து விவசாய கிணறுகள், நிலத்தடி நீர் மட்டம் வறண்டது.விவசாய பணிகள் தண்ணீர் இல்லாமல் முடங்கியது. நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்றதால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழக அரசு அனைத்து ஹிந்து கோவில்களிலும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் செய்ய உத்தரவிட்டது.ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் நேற்று மழை வேண்டிய ஜலகண்டேஸ்வரர் லிங்கத்துக்கு பக்தர்கள் குடம், குடமாக தண்ணீர் ஊற்றி சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.இக்கோவிலில் ஜலகண்டேஸ்வரர் லிங்கம், தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் மத்தியில் உள்ளது. மழையில்லாத காலங்களில் இந்த லிங்கத்துக்கு தண்ணீர் ஊற்றி கற்பூரம் ஏற்றி யாகம் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்து மழை பெய்யும் என ஐதீகமாக பக்தர்கள் நம்பி வருகின்றனர்.நேற்று ஜலகண்டேஸ்வரர் லிங்கம் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஊற்றி, அந்த தொட்டியில் பக்தர்கள் இறங்கி சிறப்பு நீர் அபிஷேகம் செய்தனர். அதன்பின் தொட்டியில் உள்ள நந்தியின் கழுத்து வரைக்கும் தண்ணீர் நிரப்பி சிவச்சாரியர்கள், வருணயாகம், வருண ஜெபம் செய்தனர்.மேலும், மேகவர்ஷினி, அமிர்தவர்ஷினி ராக பூஜைகள் செய்து கங்காதீஷ்வரருக்கு நீர் அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.