உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 70 ஆண்டாக இயங்காமல் இருந்த திருவாரூர் கோவில் மணி சீரமைப்பு!

70 ஆண்டாக இயங்காமல் இருந்த திருவாரூர் கோவில் மணி சீரமைப்பு!

திருச்சி: கடந்த 70 ஆண்டாக இயங்காமல் இருந்த திருவாரூர் மாவட்டம் சதுரங்கநாதர் கோவில் மணியை திருச்சி பெல் சீரமைத்து வழங்கியுள்ளது. கோவில் மணிகளை சீர் செய்வதற்கான நவீன தொழில்நுட்பம், திருச்சி பெல் வெல்டிங் ஆராய்ச்சி மையத்தில் உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் உள்ள இந்து கோவில்கள், தேவாலயங்கள் ஆகியவற்றில் உள்ள 40 கோவில் மணிகளை இதுவரை சீரமைத்துக் கொடுத்துள்ளது. இதில், திருச்சி மலைக்கோட்டை கோவில் மணியை சீரமைத்தது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது, திருவாரூர் மாவட்டம், பூவானூர் கிராமத்தில் உள்ள சதுரங்கநாதர் கோவில் மணி தற்போது சீரமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.மொத்தம் 800 கிலோ எடையில், 750 மில்லி மீட்டர் உயரம் கொண்ட இந்த கோவில் மணி, தொடர் பயன்பாடு காரணமாக அதன், அடிப்பகுதியில் 350 மில்லி மீட்டர் நீளத்திற்கும், 25 மில்லி மீட்டர் அகலத்திற்கும் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் கடந்த 70 ஆண்டுகளாக மணி இயங்காமல் இருந்தது.சிறப்பு வெல்டிங் தொழில்நுட்பம் மூலம் இந்த கோவில் மணியில் ஏற்பட்டிருந்த விரிசலை பெல் நிறுவன வெல்டிங் வல்லுனர்கள் அடைத்தனர்.சீரமைக்கப்பட்ட கோவில் மணி ஒப்படைக்கும் விழா நேற்று பெல் வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பெல் செயல் இயக்குனர் கிருஷ்ணன் தலைமை வகித்து, சதுரங்கநாதர் கோவில் பிரதோஸ கமிட்டி சேர்மன் பஞ்சநாதனிடம் மணியை ஒப்படைத்தார்.இந்த நிகழ்ச்சியில், கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர், பூவானூர் கிராம பிரதிநிதிகள், பெல் பொதுமேலாளர்கள் வாசுதேவன், ஈஸ்வரன், உதவி பொதுமேலாளர் மதியன்னாள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !