திட்டை கோவிலில் கும்பாபிஷேக விழா
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வரும் 15ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்துவது குறித்து, தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது.இதில், ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் குமரதுரை, உதவி கமிஷனர் ஞானசேகரன், கலெக்டர் பி.ஏ., (பொது) குணசேகரன், ஆர்.டி.ஓ.,க்கள் காளிதாஸ் (தஞ்சை), சங்கரநாராயணன் (கும்பகோணம்), முருகேசன் (பட்டுக்கோட்டை), துணை இயக்குனர் (சுகாதாரம்) மோகன், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், தாசில்தார் முருகதாஸ், அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் முத்துகிருஷ்ணன், தீயணைப்புத்துறை உதவிக்கோட்ட மேலாளர் மகாலிங்கமூர்த்தி, திட்டை பஞ்., தலைவர் மங்கையர்க்கரசி, கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ், இந்திய செஞ்சிலுவை சங்க செயலர் வசந்தா பங்கேற்றனர். கூட்டத்துக்கு தலைமை வகித்து கலெக்டர் பாஸ்கரன் பேசியதாவது: தஞ்சையை அடுத்த திட்டையிலுள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் சீரமைப்பு பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, வரும் 15ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடக்கிறது.ஹிந்து அறநிலையத்துறை சார்பில், விழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தகர பந்தல் அமைக்க வேண்டும். விழா தினத்தில் தடையில்லா மின்சப்ளை இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். சிரமமின்றி பக்தர்கள் தரிசனம் செய்ய தடுப்புக்கட்டை அமைத்து ஒருவழிப்பாதை ஏற்படுத்த வேண்டும்.திட்டை பஞ்., நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு போதிய குடிநீர் வசதி, தற்காலிக கழிவறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விழா தினத்தில் மருத்துவ மையம் ஏற்படுத்தி, முதலுதவி சிகிச்சையளிக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். அவசர ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைக்க வேண்டும்.போக்குவரத்துத்துறை மூலம் கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்கவும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தனியார் உதவி பெற்றும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேற்கண்ட பணிகளில் அனைத்து துறையினர் இணைந்து பணியாற்றி, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதி செய்து தர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.