ரூ.16 கோடி செலவில் திருமலையில் புதிய தங்க தேர்!
திருப்பதி: திருமலை கோவிலில், 16 கோடி ரூபாய் செலவில், புதிய தங்க தேர் உருவாக்க, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை கோவிலில், கடந்த காலங்களில், மரத்தாலான தேர் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர், 1992ம் ஆண்டு வரை, வெள்ளி தேர் பயன்பாட்டில் இருந்தது. 92 -93ம் ஆண்டு முதல், தங்க தேர் பயன்பாட்டுக்கு வந்தது. 2005ம் ஆண்டு, இந்த தேருக்கு புதிதாக தங்க மூலம் பூசப்பட்டது. இந்த சூழ்நிலையில், 16 கோடி ரூபாய் செலவில், புதிய தங்க தேரை உருவாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. புதிய தங்க ரதம், 40 அடி உயரமும், 35 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். முழுவதும் மரத்தால் செய்யப்பட்டு, பின் தங்க முலாம் பூசுவதற்காக, திருமலைக்கு கொண்டு வரப்படும். அக்டோபர் மாதம் நடைபெற உள்ள, பிரம்மோற்சவம் விழாவிற்குள், புதிய தங்க ரதப் பணியை முடிக்க வேண்டும் என, தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. உத்தரகண்டில் ஏழுமலையான் கோவில்: உத்தரகண்ட் மாநிலத்தில், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய, நான்கு இடங்கள் சேர்த்து, "சார்தாம் என்றழைக்கப்படுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சீரமைப்பு பணி முடிந்த பிறகு, தலா, 10 கோடி ரூபாய் செலவில், நான்கு இடங்களிலும் ஏழுமலையான் கோவிலை அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.