கர்நாடகாவில் கோவில் கட்டிய சோழ மன்னன்: கல்வெட்டு தகவல்!
சென்னை: சோழர் காலத்தில், தமிழகத்தில் கோவில்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்து எழுப்பப்பட்டதோ, அதே போல், கர்நாடகாவிலும் முதலாம் ராஜராஜன் காலத்தில், கோவில்கள் எழுப்பப்பட்டன, என, மத்திய தொல்லியல் துறையின், முன்னாள் கண்காணிப்பாளர், வெங்கடேசன் கூறினார்.
தமிழ் ஆர்ட்ஸ் அகடமியின் சார்பில், "கர்நாடகத்தில் சோழர் கோவில்கள் என்ற தலைப்பில், தொல்லியல் பற்றிய சிறப்புக் கூட்டம், சென்னையில், நேற்று முன்தினம் நடந்தது. தமிழக தொல்லியல் துறையின் முன் னாள் இயக்குனர், நாகசாமி, வரவேற்புரை ஆற்றினார். மத்திய தொல்லியல் துறையின், கண்காணிப்பாளர், டாக்டர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கர்நாடகாவில் உள்ள, சோழர் கோவில்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
விழாவில், வெங்கடேசன் பேசியதாவது: கலியூர் போர் முதலாம் ராஜராஜ சோழன், கி.பி., 1004ல், கர்நாடகாவில் உள்ள, கலியூர் என்ற இடத்தின் மீது போர் தொடுத்தார். அப்படையெடுப்பை தடுத்து நிறுத்த, அங்குள்ள மக்கள், சோழர் படையோடு போர் புரிந்தனர். அதில், அப்பகுதியைச் சேர்ந்த, 18 பேர் கொல்லப்பட்டனர். இதற்கான குறிப்பு, "விக்கிரம சோழ உலா நூலில் குறிப்பிடப்படுகிறது. "கல்லூர் என, இன்று அழைக்கப்படும், கலியூரில், அகழாய்வு செய்த போது, பல கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் மேற்கண்ட சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. போரில் உயிர் நீத்த, வீரர்கள் பெயர்களும், அவர்கள் பற்றிய குறிப்புகளும் பொறிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் உயிர் நீத்த போது, அவர்களின் மனைவியர், உடன் கட்டை ஏறியதும், அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற்காலத்தில், "ஹனசோகே என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டிலும் இக்குறிப்புகள் காணப்படுகின்றன.
வீரர்களின் எலும்பு: கலியூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டுகள், கர்நாடகாவில் உள்ள, மானுடவியல் ஆய்வு மையத்தில், ஒப்படைக்கப்பட்டன; ஆய்வில், அந்த எலும்பு துண்டுகள், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தவை என்பது கண்டறியப்பட்டன. இதன் மூலம், போரில் உயிர் நீத்த, உள்ளூர் வீரர்களின் எலும்பு துண்டுகளாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. முதலாம் ராஜராஜன், கர்நாடக பகுதிகளை, கைப்பற்றிய போதும், அப்பகுதிகளில், கன்னடத்தில் மட்டுமே, கல்வெட்டுகளை பொறித்தார். முதல், 10 ஆண்டுகள் கன்னட மொழியில் கல்வெட்டுகளை பொறித்தார். பிற்காலத்தில், அனைத்து கல்வெட்டுகளையும், தமிழிலேயே பொறித்தார். சோழர் காலத்தில், தமிழகத்தில் எவ்வாறு கோவில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுப்பப்பட்டதோ, அதே போல், கர்நாடகாவிலும் கோவில்கள் எழுப்பப்பட்டன. இவ்வாறு, வெங்கடேசன் கூறினார். - நமது நிருபர் -