உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லால்குடி கோவிலில் புதையல் தொல்லியல் துறை ஆய்வு

லால்குடி கோவிலில் புதையல் தொல்லியல் துறை ஆய்வு

திருச்சி: லால்குடி அருகே திருமணமேடு பஞ்சநதீஷ்வரர் கோவிலில் கிடைத்த புதையல் காசுகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமணமேடு கிராமத்தில், பழமை வாய்ந்த பஞ்சநதீஷ்வரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டில், சோழ மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவில் முன்பகுதியில் மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. ஆறடி ஆழத்தில், காசுகள் அடங்கிய மண் கலயம் ஒன்று கிடைத்தது. புதையல் கிடைத்ததாக ஊருக்குள் தகவல் பரவியது. பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்தனர். இதற்கிடையே கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி, லால்குடி தாசில்தார் ஸ்டெல்லா ஞானமணி பிரமிளா உள்ளிட்டோர் கோவிலில் கிடைத்த காசுகளை பார்வையிட்டனர். அப்போது அந்த காசுகள் செப்புக்காசுகள் என்பது தெரியவந்தது. அதையடுத்து மண்கலயம் மற்றும் காசுகளை ஆர்.டி.ஓ., பார்த்திபனிடம் ஒப்படைத்தனர். அவர் முன்னிலையில் எண்ணியபோது, மொத்தம், 35 செப்புக்காசுகள் இருந்தன. அந்த நாணயங்கள் எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பதை கண்டறிய தொல்லியல் துறையினர் வசம் இன்று ஒப்படைக்கப்படும் என்று, நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். கோவிலில் புதையல் கிடைத்த சம்பவம் அப்பகுதி மக்களை பரவசப்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !