உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்!

ராமேஸ்வரம் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளதையடுத்து, கோவிலில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது, என, எஸ்.பி., மயில்வாகனன் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன், ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் பயங்கரவாதிகள், வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், சர்வதேச பயங்கரவாத தொடர்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன், பீகார் புத்த கயாவில் உள்ள, மகா போதி ஆலயத்தில், வெடிகுண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து, தேசிய அளவில் பிரசித்தி பெற்ற கோவில்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக, உளவுத்துறை எச்சரித்து உள்ளது. எச்சரிக்கையை தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, எஸ்.பி., மயில்வாகனன் நேற்று ஆய்வு செய்தார். கோவில் இணை கமிஷனர் செல்வராஜிடம், ஆலோசனை நடத்திய பின், எஸ்.பி., கூறியதாவது: ராமநாத சுவாமி கோவிலில், பயங்கரவாதிகள் புகுந்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்து உள்ளது. கோவில் பாதுகாப்பில், கூடுதலாக, 50 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின், அனுமதிக்கப்படுவர். பிரதான வாயிலில், கூடுதலாக, "மெட்டல் டிடெக்டர் பிரேம், சுழல் கேமரா, கண்காணிப்பு கோபுரம் அமைக்க, கோவில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளோம். கோவில் வெளிப்புறத்திலும், கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !