அம்மன் கோயிலில் வளைகாப்பு திருவிழா கோலாகலம்!
ADDED :4520 days ago
திருநெல்வேலி: மேலநத்தம் அருந்தவசு அம்மன் கோயிலில் வளைகாப்பு திருவிழா கோலாகலமாக நடந்தது. மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தில் உள்ள அருந்தவசு அம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு கூழ்காய்ச்சும் வைபவம் மற்றும் வளைகாப்பு திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கூழ் காய்ச்சும் வைபவம் நடந்தது. இதனையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க அம்மனுக்கு வளைகாப்பு மற்றும் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. உற்சவ அம்மன் காளி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் மேலநத்தம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதமாக மஞ்சள் சரடு, மஞ்சள் தூள், குங்குமம், வளையல்கள், அம்மன் படம் போன்றவை வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.