பழநியில் திருவாசகம் முற்றோதல் விழா
ADDED :4492 days ago
பழநி: பழநி அடிவாரத்தில் திருவாதவூர் மாணிக்கவாசகரின், தெய்வ நூலான திருவாசகம் முழுவதும் ஓதும் "திருவாசக முற்றோதல் எனும் பெருவிழா நடந்தது. முன்னதாக, பட்டத்துவிநாயகர் கோயிலிருந்து மங்கள வாத்தியம் முழங்க, ஊர்வலம் புறப்பட்டு, முக்கியவீதிகள் வழியாக மண்டபத்தை அடைந்தது. நடராஜப் பெருமான், மாணிக்கவாசகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவிற்கு திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் கூட்டத் தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். காலை 7 முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து, திருவாசகத்தில் உள்ள அனைத்து பதியங்களையும் பாடினார்கள். பழநி திருவாசக மேடை சங்கரநிலையம் துறவி ராஜம்மாள், சாது சண்முக அடிகளார், சிவானந்தா புலிப்பாணி மற்றும் பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர அடிகளார், உட்பட ஆன்மிகப்பெரியோர்கள் பலர் பங்கேற்றனர்.