உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிறைபுத்தரி பூஜை: சபரிமலை நடை திறப்பு : ஆக., 17ல் புதிய தந்திரி பொறுப்பேற்பு

நிறைபுத்தரி பூஜை: சபரிமலை நடை திறப்பு : ஆக., 17ல் புதிய தந்திரி பொறுப்பேற்பு

சபரிமலை : நிறைபுத்தரி பூஜைக்காக, சபரிமலை நடை, நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை, நிறைபுத்தரி பூஜை நடைபெறுகிறது. ஆக., 17ல், புதிய தந்திரியாக, கண்டரரு மகேஸ்வரரு பொறுப்பேற்கிறார்.
திருவிதாங்கூர் அரண்மனை : கேரள மாநிலம், சபரிமலையில், ஆடி மாதம், நிறைபுத்தரி பூஜை நடைபெறும். சபரிமலையில் எல்லா பூஜைகளும் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டாலும், நிறைபுத்தரி பூஜை, குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன், திருவிதாங்கூர் அரண்மனையில் முடிவு செய்து, தேவசம் போர்டுக்கு அறிவிக்கப்படுகிறது.அதன்படி, நாளை காலை, 5:45 மணிக்கு, ரோகிணி நட்சத்திரத்தில், நிறைபுத்தரி பூஜை நடைபெறுகிறது. இதற்காக, சபரிமலை நடை, நேற்று மாலை, 5:30 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி தாமோதரன் போற்றி, நடை திறந்து, தீபம் ஏற்றினார். வேறு எந்த விசேஷ பூஜைகளுமின்றி, இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், கணபதிஹோமம் நடைபெறும்.
நெற்கதிர் கட்டுகள் : தொடர்ந்து, அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகள், கோவில் முன்புறம் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு, தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை செய்வார். அதை, மேல்சாந்தி தலையில் சுமந்து, கோவிலை வலம் வருவார். கோவிலில் நெற்கதிர்கள் பூஜிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிராசதமாக வழங்கப்படும். பின், நெய் அபிஷேகமும், வழக்கமான பூஜைகளும் முடிந்து, இரவு, 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும். கடந்த ஒரு ஆண்டாக, சபரிமலையில் தந்திரி பொறுப்பு வகித்து வந்த, கண்டரரு ராஜீவரரு, இன்றைய பூஜையுடன் பதவி காலத்தை நிறைவு செய்யும் நிலையில், தந்திரியாக கண்டரரு மகேஸ்வரரு, ஆக., 17ல் பொறுப்பேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !