63 நாயன்மார்கள் பெருவிழா ஏராளமான பக்தர் பங்கேற்பு
ராசிபுரம்: ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள, 63 நாயன்மார்களுக்கான பெருவிழா, மூன்று நாட்கள், கோலாகலமாக நடந்தது. ராசிபுரம் கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில், 63 நாயன்மார்கள் பெருவிழா, ஆண்டு தோறும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 12ம் தேதி, தீக்கை பெருவிழாவுடன் துவங்கியது. 13ம் தேதி, காலை, திருமுறை இன்னிசையும், மதியம் கைலாசநாதர் சமேத தர்மசம்வர்தினி மற்றும் நாயன்மார்களுக்கு, திருமஞ்சன அபிஷேகமும் நடந்தது. மேலும், கோவிலில் உள்ள விநாயகர், முருகன், நந்தியெம்பெருமாள், அறம்வளர்த்தநாயகி, கைலாசநாதர், அறுபத்து மூவர் ஆகிய தெய்வங்களுக்கு திருமஞ்சன அபிஷேகமும் நடந்தது. நேற்று முன்தினம், திருமுறைகளை தலையில் ஏந்தியபடி சிவனடியார்கள், காயிலாய வாத்தியம் முழங்க ஊர்வலமாக வந்தனர். அதை தொடர்ந்து, திருமுறை இன்னிசையும், மாலை ஐம்பெரும் மூர்த்திகளுடன், 63 நாயன்மார்கள் உற்சவருடன், சிவனடியார்கள் ஆடி, பாடி, பேரிகை முழங்க, வாண வேடிக்கையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.