நாகபூண்டி அம்மன் கோவில் ஆடி பெரு விழா கொண்டாட்டம்
ஆர்.கே.பேட்டை: நாகபூண்டி தான்தோன்றியம்மன் கோவிலில், நேற்று நடந்த ஆடி பெருவிழாவில், பண்டாசுரமர்தினி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாகபூண்டி கிராமத்தில், தான்தோன்றியம்மன் கோவிலில் ஆடி பெருவிழா, கடந்த, 16ம் தேதி துவங்கியது. நேற்று பண்டாசுரமர்தினி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். மூலவர் அம்மனாக, மரத்தால் செய்யப்பட்ட, 10 அடி உயர சிலை அமைந்துள்ளது.கோவில் குறித்த தல வரலாறில், கருவறை வாசலை விட உயரமான சிலையை ஆசாரி வடிவமைத்து விட்டார். கருவறையில் அம்மனை பிரதிஷ்டை செய்ய முடியாத சிக்கல் எழுந்தது.அப்போது கோவில் வளாகத்தில் இருந்த பெரியவர் ஒருவர், அம்மனிடம் தானாக கருவறையில் சென்று அமர்ந்துகொள்ள வேண்டினார். அவரின் வேண்டுகோளை ஏற்று, அம்மன் கருவறையில் எழுந்தருளியதாக கூறப்படுகிறது.இங்கு, சக்தி, சிவன் வடிவமான வேம்பு, அரசு மரங்கள் தலவிருட்சமாக, ஒன்றாக அமைந்து உள்ளது. கடந்த, 16ம் தேதி காலை பூங்கரகம், பம்பை, உடுக்கையுடன், 108 பால்குடம் ஊர்வலம் மற்றும் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று காலை அபிஷேகம், சந்தனக் காப்பு மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவைஒட்டி, திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு பண்டாசுரமர்தினி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.