உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லிங்க புராணம் குறுந்தொகை

லிங்க புராணம் குறுந்தொகை

அன்பெனும் பிடியுள் அகப்படுபவர் சிவ பெருமான். ஆனால், பிரம்மனும் திருமாலும் அவரைத் தங்கள் ஆற்றலால் அளக்க முயன்று தோற்றனர். அவர்களுடைய அறியாமையைக் கண்டு இரங்கிய பரமன், நான் இங்கிருக்கிறேன் என்று லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு, அவர்களுக்கு அருள்பாலித்தார். இதை விளக்கி, இறைவனை பக்தி எனும் வலையால் பிடிக்க இயலுமே தவிர, அகங்காரத்தால் அடைய முடியாது என்பதை அறிவுறுத்தி ஒரு பதிகம் பாடினார் அப்பரடிகள். அதை லிங்க புராணக் குறுந்தொகை என்பர். பரமனின் அருள்பெற, பக்தர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிடுகிறது இந்தப் பதிகம்.

மணம் மிகுந்த மலர்களைக் கொய்து சிவனுக்கு அர்ச்சனை புரிதல். அவரை நன்னீரால் திருமுழுக்காட்டி பூக்களால் அலங்கரித்து வலம் வருதல். சிவாலயங்களைச் சாணமிட்டு மெழுகி, நீர் தெளித்துப் பெருக்கி, கபாலியின் வேடத்தை நினைத்து உருகுதல்.

பயனற்ற வார்த்தைகளைப் பேசாமல், நெய்யும் பாலும் கொண்டு அழல்மேனி அம்மானை அபிஷேகித்தல். சிவலிங்க மூர்த்திக்கு ஆடைகள் உடுத்தி, எருக்கு மலர் களாலா தலைமாலையை அணிவித்தல்.

ஒளி நிறைந்த பெருமானுக்காகக் குடம் குடமாக நீர் சுமந்து தருதல்; மரங்களில் ஏறி, மலர்களைக் கூடை கூடையாகப் பறித்துத் தருதல். சிவதண்டமாகிய கட்டங்கம், கபாலம் ஏந்தி, அவனது புகழ் பாடி ஆடி, எட்டுறுப்புகளும் தோய வணங்குதல்.

நல்ல மலர் மாலைகளைப் பூண்டு, விபூதி அணிந்து, பெருமானைப் போற்றுதல். மன்மதனை எரித்த சிவபெருமானின் திருவடிகளில், குவளை மலர்களைக் கட்டி, மாலையாக அணிவித்தல், உருத்திராக்கங்களை அணிதல். சிவ சந்நிதியில் சங்கங்களை ஊதுதல். இவை சிவனடியார்க்கு உரிய செயல்களாகும்.

சிவராத்திரியின் 3-வது காலமான லிங்கோத்பவ காலத்தில் லிங்க புராண குறுந்தொகையைப் பாடி வழிபடுவதால் எண்ணற்ற பலன்கள் கிட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !