திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் தேரோட்டம் கோலாகலம்
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆக, 23 ஆவணித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இக்கோவிலில் ஆவணித்திருவிழா இம்மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியருளினார். நிறைவு நாளான பத்தாம் திருவிழா ஆக, 23 நடந்தது. காலை 6 மணியளவில் சிம்ம லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரதவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் (பொ) அன்புமணி, அலுவலக கண்காணிப்பாளர் ராமசாமி, இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் பூதலிங்கம், திருவிழா பணியாளர் வெங்கடேசன், செல்வகுற்றாலம், சிவா உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர். இரவு அம்மன் அலங்காரச் சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளி சண்முகருக்கு எதிர்சேவை காட்சியளித்து வீதி வலம் வந்து கோயில் சேர்ந்து திருவிழா நிறைவு பெற்றது.