உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோகுல கண்ணனுக்கு கோலாகல ஜெயந்தி விழா

கோகுல கண்ணனுக்கு கோலாகல ஜெயந்தி விழா

கோவை : கோவையில் பல்வேறு பகுதிகளில், கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பீளமேடு ஜெகன்நாதர் கோவிலில், நேற்று காலை மங்கள ஆரத்தி நிகழ்ச்சியுடன் கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்கியது. ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ராதேவி ஆகியோருக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டது. தங்க, வைர, வைடூர்யம், முத்து, பவள நகைகள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து, ஸ்ரீ மத் பாகவதம் சொற்பொழிவு, கிருஷ்ணலீலா பஜனை நடந்தது."இஸ்கான் பக்தர்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள், நேற்று முன்தினம் காலை முதல் தண்ணீர் கூட அருந்தாமல் ( மிர்ஜில்) விரதம் இருந்தனர்.பகவான் கிருஷ்ணர் பிறந்த நேரமான இரவு 12.00 மணிக்கு நடந்த சிறப்பு அபிஷேகம் நிறைவடைந்த உடன் பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்தனர். விரதம் நிறைவு செய்த பக்தர்களுக்கு அனுக்கல்ப பிரசாதம்(தானியங்கள் இல்லாத பொருள்களால் தயாரிக்கப்பட்டஉணவு) வழங்கப்பட்டது.இன்று இஸ்கான் ஸ்தாபகர் சுவாமி பிரபுபாதாவுக்கு வியாசபூஜை காலை 11.00 மணிக்கு நடக்கிறது. இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
*மாச்சம்பாளையம் கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. நேற்று காலை கணபதிஹோமம் நடந்தது. மாலை 4.00 மணிக்கு கிருஷ்ணரை தொட்டிலில் இடும் நிகழ்சியும், குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து பஜனை குழுவினருடன் உலா வந்தனர்.இன்று காலை அபிஷேக பூஜையும், 11.30 மணிக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது.மாலை 6.00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. நாளை இரவு வழுக்குமரம் ஏறும் நிகழ்வு நடக்கிறது.இதில் இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
*விஸ்வ இந்து பரிஷத் பொன் விழாவை முன்னிட்டு, சுந்தராபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவின் துவக்கமாக, காலை 6:00 மணிக்கு, அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் சரவணகுமார் தலைமையில், கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாலை 3:00 மணிக்கு, குறிச்சி, பெருமாள் கோவி லிலிருந்து, 85 குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து, ஊர்வலமாக மண்டபத்தை வந்தடைந்தனர்; தர்மகர்த்தா மருதாசலம், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட நீதிபதி முருகானந்தம், சுவாமி சர்வேஷ்வரானந்தர், குருஜெகனாத சுவாமி ஆகியோர் பேசினர். தர்ம ரக்சண சமிதியின் மாநில அமைப்பாளர் மணிகண்டன், வி.எச்.பி.,யின் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாநில செயலாளர் கணேசன், லட்சுமண நாராயணன், மாநகர் மாவட்டச் செயலாளர் சிவலிங்கம், மயில்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !