திருப்பரங்குன்றம் கோயிலில் திருமணத்திற்கு தனி மண்டபம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் திருமணத்திற்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவாட்சி மண்டபத்தில் தனி சன்னதி அமைத்து சுவாமி எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளார். சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருமணம் நடந்த தலம் என்பதால், முகூர்த்த நாட்களில் திருமணங்கள் அதிகம் நடக்கின்றன. முன்பு மூலவர் சன்னதியில் திருமணம் நடந்தது. குறுகலான இடம் இருப்பதால், அனைத்து பக்தர்களும் நல்ல நேரத்திற்குள் திருமணம் செய்ய முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. இதன்எதிரொலியாக, திருமணங்கள் உற்சவர் சன்னதிக்கு மாற்றப்பட்டன. அங்கும், இடவசதி குறைவாலும், கம்பத்தடி மண்டபத்தில் நந்தி இருப்பதாலும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் உற்சவர் சன்னதியிலும் கூட்டம் அதிகம் இருப்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் திருமணம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, மடப்பள்ளி அருகேயுள்ள மண்டபத்தில் திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தில், முதன்முறையாக முத்துக் குமாரசுவாமி (முருகப்பெருமான்) தெய்வானை எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளனர். இங்கு திருமணத்தை முடித்துக் கொண்டு மூலவர்களை தரிசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இனி இந்த சன்னதியிலேயே முத்துக்குமாரசுவாமி, தெய்வானை அருள்பாலிப்பர். இணை கமிஷனர் பச்சையப்பன் கூறுகையில், "" பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் திருமணம் முடிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் அலங்காரப் பணிகள் விரைவில் துவங்கும். கம்பத்தடி மண்டபத்திலுள்ள உற்சவர் சன்னதி, வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும், என்றார்.
திருப்பரங்குன்றத்தில் ரூ.13 லட்சம் வருமானம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 35 உண்டியல்கள் உள்ளன. துணைகமிஷனர் பச்சையப்பன், அழகர்கோவில் துணைகமிஷனர் வரதராஜன் முன்னிலையில், நேற்று திறக்கப்பட்டன. அதில், 12 லட்சத்து 99 ஆயிரத்து 513 ரூபாய், தங்கம் 52 கிராம், வெள்ளி 901 கிராம் வருமானமாக கிடைத்தது. கோயில் பணியாளர்கள் பாடசாலை மாணவர்கள், அய்யப்பா சேவா சங்கத்தினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.