திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கம்ப்யூட்டர் ரசீது முறை துவக்கம்!
புதுசேரி: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், கம்ப்யூட்டர் மூலம் ரசீது வழங்கும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நவக்கிரக தலங்களில் சனி பரிகார தலமாக திருநள்ளார் விளங்குவதால், சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலில், அர்ச்சனை, அபிஷேகம், ஹோமம் ஆகியவற்றுக்கான கட்டணம் மற்றும் நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் மூலம் அச்சடிக்கப்பட்ட ரசீது வழங்கப்பட்டு வந்தது. இதில் உள்ள குறைபாடுகளை களைய, கம்ப்யூட்டர் மூலம் ரசீது வழங்கும் முறை நேற்று முதல் அமல் படுத்தப்பட்டது. கப்ம்யூட்டர் மூலம் ரசீது வழங்கும் பிரிவை, மின்திறல் குழும சேர்மன் சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி, ராஜாசுவாமிநாதன் சிவாச்சாரியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.